நஜிப், அருள் புதன்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் 1எம்டிபி முன்னாள் தலைவர் அருள் கண்ட கந்தசாமியும் 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையில் மாற்றம் செய்ததன்வழி அதிகார மீறலில் ஈடுபட்டதாக புதன்கிழமை கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) வட்டாரங்கள் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தின.

நஜிப்மீது எம்ஏசிசி சட்டம் 2009, பிரிவு 23-இன்கீழ்க் குற்றஞ்சாட்டப்படும் என்று ஃப்ரி மலேசியா டுடே கூறியது.

“அவர் எதிர்காலத்தில் தம்மீது சிவில் அல்லது கிறிமினல் வழக்கு தொடுக்கப்படுவதைத் தவிர்க்க கணக்கறிக்கையில் சில பகுதிகளை நீக்கிவிடுமாறு தலைமைக் கணக்காளரைப் பணித்தார் என்று கூறப்படுகிறது”, என்று அது கூறிற்று.

நஜிப்புக்கு உடந்தையாக இருந்தார் என அருள்மீது குற்றம் சுமத்தப்படும்.

நாளை மறுநாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்குமுன் நாளை அவ்விருவரும் எம்ஏசிசி தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டிருப்பதாக எம்ஏசிசி உயர் வட்டாரம் ஒன்று மலேசியாகினியிடம் தெரிவித்தது.