வழிபாட்டு இடங்கள் மீது இஸ்லாமிய சமய அதிகாரிகள் கடைப்பிடிக்கும் முரண்பாடான நிலை குறித்து வெளிப்படையாகப் பேசும் சமய அறிஞர் முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர்கள் ஒரு பக்கம், முஸ்லிம்கள் கிறிஸ்துவர்களால் கவரப்பட்டு விடுவர் என்ற அச்சத்தினால் முஸ்லிம்கள் தேவாலயங்களுக்கு செல்வதை விரும்பவில்லை.
அதே வேளையில் முஸ்லிம் தொழுகை மையங்களுக்கு முஸ்லிம் அல்லாதார் செல்வதற்கு எதிரான நிலையையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
“முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தினால் கவரப்பட்டு விடுவர் என அவர்கள் கவலைப்படுகின்றனரா?”, என அஸ்ரி இன்று விடுத்த அறிக்கை வினவியது.
அவர் எடுத்துக்காட்டுக்கு எந்த நிகழ்வையும் குறிப்பிடவில்லை என்றாலும் டிஎபி செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் சம்பந்தப்பட்ட சம்பவத்தையே குறிப்பிடுகிறார் என்பது தெளிவு.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செர்டாங்கில் உள்ள சூராவ் அல் ஹுடா கட்டிடத்தை பழுதுபார்ப்பதற்கு தியோ நன்கொடை வழங்கிய பின்னர் அந்த சூராவின் தொழுகை மண்டபத்தில் உரையாற்றுவதற்கு அவரை அழைத்ததற்காக அந்த சூராவின் குழு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அங்கு சுருக்கமாக உரையாற்றிய தியோ இஸ்லாத்தை அவமரியாதை செய்து விட்டார் என்றும் பொருத்தமான உடையை அணிந்திருக்கவில்லை என்றும் பின்னர் குற்றம் சாட்டப்பட்டது.
முஸ்லிம் அல்லாதாரின் வழிபாட்டு மையங்களுக்கு முஸ்லிம்கள் செல்வதை சமய அதிகாரிகள் விரும்பவில்லை என்றால் இஸ்லாம் பற்றி முஸ்லிம் அல்லாதார் தெரிந்து கொள்வதை அவர்கள் ஆதரிக்கிறார்களா இல்லையா என அஸ்ரி கேள்வி எழுப்பினார்.
“நாம் இந்த நாட்டின் அரசியல் பற்றி அதிகமான குழப்பத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் அரசியல் விஷயங்கள் சமயப் பிரச்னைகளுடன் கலக்கப்படுகின்றன.”
“தேவாலயத்துக்கு செல்வதின் மூலம் ஒருவர் கிறிஸ்துவ சமயத்தினால் கவரப்படுகிறார் என்றால் பள்ளிவாசல் ஒன்றுக்குள் நுழையும் ஒருவரும் இஸ்லாத்தினால் கவரப்பட வேண்டும். ஆகவே நாம் ஏன் அதற்கு எதிராக இருக்க வேண்டும்? முஸ்லிம் அல்லாதார் கவரப்படுவதை நாம் எதிர்க்கிறோமா?”
“இறுதியில் யார் உண்மையானவர்கள், யார் உண்மையானவர்கள் இல்லை என்பது நமக்கு புரியவே இல்லை”, என அவர் சொன்னார்.
Malaysia