அம்னோ எம்பி: இந்தியர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும், நான் ஒரு ‘அல்ட்ரா இந்தியன்’

இன்று நாடாளுமன்றத்தில் தாஜுடின் ரஹ்மான் (அம்னோ- பாசிர் சாலாக்) தம்மை இந்திய சமூகத்துக்காக போராடும் ஒரு போராளி என்றார். தாம் ஒரு “அல்ட்ரா இந்தியன்” என்றும் கூறிக்கொண்டார்.

கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக், கேள்வி நேரத்தின்போது தமிழ்ப் பள்ளிகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தபோது தாஜுடின் குறுக்கிட்டு அவ்வாறு கூறினார்.

அவர் அப்படி உரைத்ததைக் கேட்டு எம்பிகள் நகைத்தனர்.

“ஏன் நகைக்கிறீர்கள்?”, என்று தாஜுடின் சத்தமிட்டார்.

“எனக்கு இந்தியர்களைப் பிடிக்கும், தெரியுமா”, என்று கூறிச் சிரித்தார்.

ஆர்.எஸ்.என் ராயர்(ஹரப்பான் -ஜெலுத்தோங்) எழுந்து ஏன் இந்த பம்மாத்து என்று வினவினார்.

அதற்கு தாஜுடின், “இந்தியர்களுக்காக ஒரு பேரக் குழந்தையைக் கொடுத்தேன், தெரியுமா. ஒரு இந்தியர் கண் அறுவைச் சிகிச்சைக்கு உதவி செய்தேன்.

“அது உங்களுக்குத் தெரியாது, ஜெலுத்தோங். எனக்கு இந்தியர்களைப் பிடிக்கும். நான் ஒரு அல்ட்ரா இந்தியன், தெரியுமா”, என்றார்.

அதைக் கேட்டு அதற்கு முன்னதாகத்தான் எம். கருப்பையா (ஹரப்பான் -பாடாங் செராய்)வின் கேள்விக்குப் பதிலளித்துவிட்டு அமர்ந்த மஸ்லி வேடிக்கையாக சிரித்தார்.

“பாசிர் சாலாவுக்கு, நன்றி. அவருக்கு இந்தியர்கள் என்றால் இவ்வளவு பிடிக்கும் என்பதோ அவர் ஒரு அல்ட்ரா இந்தியன் என்பதோ நான் எதிர்பார்க்காத ஒன்று”, என்றார்.

“ஒரு புத்தகத்தை அட்டையைப் பார்த்து மதிப்பிட்டு விடக்கூடாது என்பது உண்மைதான்”, என்று மஸ்லி கூறினார்.

உடனே தாஜுடின், “என் சொங்கோக்கை வைத்து எதையும் முடிவு செய்து விடாதீர்கள்”, என்றார்.