சுல்தான் முகமது V, 15-வது யாங் டி-பெர்த்துவான் அகோங் பதவியில் இருந்து இன்று விலகினார்.
இஸ்தானா நெகாராவின் பத்திரிகை அறிக்கையின் வழி, அரச நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், வான் அஹ்மட் டஹ்லான் அப்துல் அஜீஸ் அதனை இன்று அறிவித்தார்.
மேலும், தனது ஆட்சியின் போது ஒத்துழைப்பு வழங்கிய அரசாங்கத்திற்குப் பேரரசர் நன்றி தெரிவித்துகொள்வதாகவும், மலேசியர்கள் தொடர்ந்து ஒற்றுமையை நிலைநாட்டுவர் என்று பேரரசர் நம்புவதாகவும் அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
கிளாந்தானின் 29-வது சுல்தானான சுல்தான் முகமட் V, கடந்த 2016, டிசம்பர் 13-ம் தேதி, கெடா சுல்தானின் மறைவிற்குப் பின்னர், நாட்டின் 15-வது பேரரசராக முடிசூட்டப்பட்டார்.
கடந்த நவம்பர் தொடக்கம், விடுமுறையில் இருந்த, பேரரசர் சுல்தான் முகமட் V-க்குப் பதிலாக, பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா, இரண்டு மாதங்களுக்குப் அப்பதவியில் இருந்தார். அவரின் பதவிக் காலம் டிசம்பர் 31, 2018-உடன் முடிவுக்கு வந்தது.
கடந்த வாரம் தொடக்கம் கசிந்து வந்த இச்செய்தி, இன்று உறுதிபடுத்தப்பட்டது.