கேமரன் மலையைக் கொடுக்குமாறு அம்னோ கேட்டதில்லை

கேமரன் மலை இடைத் தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதாக அம்னோ கூறவே இல்லை என்பதை உறுதிப்படுத்திய மஇகா தலைமைச் செயலாளர் எஸ்.வேல்பாரி, அது அத்தொகுதியை மஇகாவிடமே கொடுத்து விட்டது என்றார்.

அம்னோ ஒரே கோரிக்கையை மட்டும் முன்வைத்ததாக வேல்பாரி இன்று ஓர் அறிக்கையில் கூறினார். “வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்” களமிறக்கப்பட வேண்டும் என்பதுதான் அதன் ஒரே கோரிக்கை.

“கேமரன் மலையைக் கொடுக்க வேண்டும் என்று அம்னோ கோரிக்கை விடுக்கவில்லை.

“வெற்றிபெறும் ஆற்றல் உள்ள வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மட்டுமே கேட்டுக்கொண்டது. இப்போது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது”, என்றாரவர்.

முடிவு செய்யப்பட்டதும் கட்சி அதை அறிவிக்கும் என அவ்வறிக்கை கூறியது.

கேமரன் மலை ஒரு முக்கியமான தொகுதி என்பதால் அங்கு மஇகா போட்டியிட அம்னோ அனுமதிக்காது என்று பக்கத்தான் ஹரப்பான் எம்பி லிம் கிட் சியாங் கூறியிருந்ததற்கு எதிர்வினையாக வேல்பாரி இந்த அறிக்கையை விடுத்துள்ளார்.