‘என்னுடன் சமாதானமாகப் போங்கள், ஹராப்பானை நான் வீழ்த்தி காட்டுகிறேன்’, கேவியஸ் பிஎன்-னுக்கு வலியுறுத்து

கேமரன் இடைத்தேர்தல் : எதிர்வரும் இடைத்தேர்தலில் மஇகா அல்லது அம்னோ தலைவர்களில் யாரை நிறுத்துவது என்று பிஎன் தலைவர்கள் குழம்பிக்கிடக்கும் இவ்வேளையில், மைபிபிபி தலைவர் எம் கேவியஸ், தன்னை வேட்பாளராக நிறுத்தி, தன்னுடன் இணைந்து பணியாற்றுவதே அக்கூட்டணி வெற்றிபெற ஒரே வழி என்று கூறியுள்ளார்.

தங்களுக்குள்ளேயேப் ‘போராட்டம்’ நடத்துவதற்குப் பதிலாக, பிஎன் அதன் வேட்பாளராக, மிகவும் ‘நடுநிலை’யான தன்னை நிறுத்துவதே சிறந்தது என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

“அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது, பக்காத்தான் ஹராப்பானுக்கு இன்னுமொரு நாடாளுமன்றத்தைத் தூக்கிக் கொடுக்கவே வழிசெய்யும்.

“அவர்கள் நடுநிலையான ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அது நான்தான்,” என அவர் மலேசியாகினியிடம் இன்று தெரிவித்தார்.

கேமரன் மலை இந்திய வாக்காளர்கள் அம்னோ வேட்பாளரைப் புறக்கணிப்பர், மேலும், மஇகா வேட்பாளார் இந்தியர் வாக்குகளைப் பிரிப்பதோடு மட்டுமின்றி, மலாய்க்காரர்கள் வாக்குகளை – குறிப்பாக அம்னோ உறுப்பினர்களை – ஹராப்பானுக்கு ஆதரவாகத் திருப்பிவிடவும் வாய்ப்புள்ளது என கேவியஸ் சொன்னார்.

“அம்னோவும் மஇகாவும் என்னுடன் சேர்ந்து பணியாற்றினால், ஹராப்பானை வீழ்த்த முடியும்….. பிரச்சனை இல்லை, நம்மால் வெல்ல முடியும். இல்லையென்றால், அவர்கள் தோல்வியடைவது 100 விழுக்காடு உறுதி. அது டிஏபி-க்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் (நான் இல்லையென்றால்).

“நான் போட்டியிட்டால், மலாய், இந்தியர் மற்றும் பூர்வக்குடி மக்கள் அனைவரும் நம் பக்கம் இருப்பார்கள்.

“பூர்வக்குடியினர் என்னிடம் எப்போதும் நன்றாகப் பழகுவார்கள்,” என்றார் அவர்.

14-வது பொதுத் தேர்தல் கணக்குப்படி, கேமரன் மலையில் 34 விழுக்காடு மலாய்க்காரர்கள், 30 விழுக்காடு சீனர்கள், 15 விழுக்காடு இந்தியர்கள் மற்றும் 22 விழுக்காடு பூர்வக்குடியினர் வாக்காளர்களாக உள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில், கேமரன் மலையில் போட்டியிடும் வாய்ப்பைத் தனக்குக் கொடுக்காமல், பிஎன் தன்னைப் புறக்கணித்ததாகவும்  கேவியஸ் குற்றம் சாட்டினார்.