இஸ்லாமியக் கல்வியைப் பயிலச்சொல்லி ‘இந்து’ மாணவி நிர்பந்தம், கல்வி அமைச்சு மறுப்பு

தனது ‘இந்து’ மகளை, இஸ்லாமியப் பாடத்தைப் பயிலச்சொல்லி பள்ளி நிர்பந்திப்பதாகக் கூறிய ஒரு தந்தையின் குற்றச்சாட்டை, கல்வி அமைச்சு மறுத்துள்ளது.

தங்களின் விசாரணையின் படி, மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி எம் லுகனேஸ்வரி, 9, 2017-ம் ஆண்டில் தனது கல்வியைத் தொடங்கிய காலம் முதல், நன்னெறிக் கல்வி பாடத்தையே பயின்று வருவதாக, மலேசியக் கல்வி இயக்குநர், அமின் செனின் தெரிவித்தார்.

தேசியப் பதிவிலாகாவில், இஸ்லாமியரான தனது தாயாரைப் பின்பற்றி, லுகனேஸ்வரியும் ஓர் இஸ்லாம் என்று பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை அவர் நன்னெறிப் பாடத்தையே பயின்று வருகிறார் என்று, நேற்று ஓர் அறிக்கையில் அமின் தெரிவித்துள்ளார்.

“1996 கல்விச் சட்டத்தின் படி, இஸ்லாம் மதத்தைச் சார்ந்த மாணவர்கள், இஸ்லாமியப் பாடத்தைக் கட்டாயம் பயில வேண்டும் என்பதனைக் கல்வி அமைச்சு தெரிவித்துகொள்ள விரும்புகிறது. மலேசியத் தேசியப் பாடதிட்டத்தில், இஸ்லாமியக் குழந்தைகளுக்கு, இஸ்லாமியக் கல்வி ஒரு கட்டாயப் பாடமாகும்.

“மலேசியாவில், அரசு பள்ளிகள், அரசு உதவிப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் எதுவாயினும், ஓர் இஸ்லாமிய மாணவர் இஸ்லாமியக் கல்வியைப் பெறுவது அவரது உரிமை ஆகும்.

“எனவே, அம்மாணவி ஓர் இஸ்லாம் எனும் அடிப்படையில், பள்ளி நிர்வாகம் சட்டமுறைப்படி நடந்துகொண்டது. இதில், அம்மாணவி நிர்பந்திக்கப்பட்டார் எனும் பிரச்சனைக்கே இடமில்லை,” என்றார் அவர்.

மாணவியின் தகப்பனார், மணிவண்ணன், தனது மகள் ஓர் இந்து என்று கூறியதோடு, பிறப்புப் பத்திரத்தைக் கொடுக்காத பட்சத்தில், பள்ளி நிர்வாகம் நன்னெறிக் கல்வி பாடத்தைப் பயில அனுமதித்துள்ளது என்று அமின் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“அம்மாணவியின் பெற்றோர் எதிர்நோக்கியுள்ள பிரச்சனையைக் கல்வி அமைச்சு புரிந்துகொண்டுள்ளது. வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருப்பதால், கல்வி அமைச்சு இப்பிரச்சனையை நீதிமன்றத்திடமே ஒப்படைத்துவிடுகிறது,” என்றும் அமின் கூறுயுள்ளார்.