கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு, தலைவர்களை மதிப்பிட வேண்டாம், ஏனென்றால், அரசியல் ‘முழுமையாகப் பயிற்றுவிக்கப்பட’ வேண்டிய ஒரு விஷயம் அல்ல என்று, நெகிரி செம்பிலான் மாநிலப் பெர்சத்து தலைவர் டாக்டர் ராய்ஸ் யாத்திம் கூறினார்.
இருப்பினும், ஒரு தலைவர், கல்வியில் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருக்க வேண்டும், அது எஸ்பிஎம் தகுதி அளவில் இருந்தாலும் போதுமானது என அவர் விளக்கப்படுத்தினார்.
“அரசியல் ஒரு நபரின் ஆளுமைத் தன்மைக்கு வழிவகுக்கும், மக்களுடன் தொடர்புகொள்வதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும் அது தேவையானது.
“அதற்குப் பட்டப்படிப்பு எல்லாம் தேவையில்லை….. இருந்தால் நல்லது, ஆனால் மக்கள் இன்று சொந்தமாக அரசியல்வாதிகளை மதிப்பிடுகின்றனர்.
“உதாரணத்திற்கு, துன் காஃபார் பாபா….. அவர் எஸ்பிஎம் அளவுதான் படித்துள்ளார் ஆனால், நாட்டின் துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்தார். எனவே, அரசியலில் ஈடுபட உயர்ந்த கல்வி தகுதி எல்லாம் தேவையில்லை,” என்று பெர்னாமாவிடம் ராய்ஸ் கூறியுள்ளார்.
இருப்பினும், ஒருவர் தனது கல்வி தகுதி சான்றிதழை ஏமாற்றும் செயல் கண்டிக்கத்தக்கது என்று அவர் மேலும் சொன்னார்.
-பெர்னாமா