1எம்டிபி பணம் பாஸ் கட்சிக்குச் சென்றதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என எம்ஏசிசி வட்டாரமொன்று கூறியது.
பாஸ் தலைவர்கள் அம்னோவிடமிருந்து ரிம90 மில்லியனைப் பெற்றதாகக் கூறப்பட்டதை அடுத்து எம்ஏசிசி அதிகாரிகள் பாஸ் கட்சிக் கணக்குகளை ஆராய்ந்ததில் பணம் கைமாறியதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
“பாஸ் கணக்குகளில் ரிம90 மில்லியன் வரவு வைக்கப்பட்டதாகக் காணப்படவில்லை”, என்று கூறிய வட்டாரம், ஆராயப்பட்டவை பாஸின் அதிகாரப்பூர்வ கணக்குகளா தலைவர்களின் தனிப்பட்ட கணக்குகளா என்று வினவியபோது “அவை எல்லாமே பாஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள்”, என்றது.
எம்ஏசிசி, பாஸ் தலைவர்களின் தனிப்பட்ட கணக்குகளைச் சோதனை செய்து பார்த்து விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
எம்ஏசிசி-இடமிருந்து ஆகக் கடைசித் தகவல்களைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
இவ்விவகாரத்தில் ஊகங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று ஊழல்தடுப்பு ஆணையத் தலைவர் சுக்ரி அப்துல் கண்டிப்பாகக் கூறியதை அடுத்து எம்ஏசிசி உயர் அதிகாரிகள் அது குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள்.