‘சுங்கை பூலாய் சதுப்புக்காடு பிரச்சனை – அரசாங்கத்திற்கு அதிக அதிகாரம் உள்ளது’, அமைச்சருக்கு வழக்குரைஞர் பதில்

‘ஃபோரஸ்ட் சிட்டி கோல்ப் ரிசார்ட்’ ஆக மாற்றங்கண்டு வரும், பாதுகாக்கப்பட்ட சுங்கை பூலாய் காடு பிரச்சனையில், அரசாங்கம் சில சிக்கல்களில் கட்டுப்பட்டுள்ளது என்ற அமைச்சரின் கூற்றை, வழக்குரைஞர் என் சுரேந்திரன் நிராகரித்தார்.

மத்திய அரசாங்கத்தால், இப்பிரச்சனையில் ஒன்றும் செய்ய இயலாது எனும் நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் சேவியர் ஜெயக்குமாரின் பதில் பொறுப்பற்றது என சுரேந்திரன் தெரிவித்தார்.

“மத்திய அரசாங்கம் எதிலும் கட்டுப்பட வேண்டியக் கட்டாயமில்லை. அமைச்சரே, தயவுசெய்து அரசியலமைப்பைப் படியுங்கள்.

“தேசிய நிலக் கவுன்சில், ஜொகூருக்குக் கட்டளை இடலாம். தேசிய மரபுரிமைச் சட்டத்தின் கீழ், சுங்கை பூலாய்யை, ஒரு பாரம்பரியத் தளமாக அறிவிக்கலாம்.

“ஜொகூர் மாநில அரசாங்கம், பி.என். வசமல்ல, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் கீழ் உள்ளது.

“மக்களிடம் இந்தப் பிரச்சனை ‘முடிந்தது’ என்று ஓர் அமைச்சர் சொல்வது, பொறுப்பற்ற செயல்.

“உங்களால் கட்டமைப்பை அகற்ற முடியும், குறைந்தபட்சம் அழிவுகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க முடியும், கோல்ஃப் திடல் அமைப்பதைத் தடுக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

பல்வகை சதுப்புநிலக் காடு உயிரினங்களை ஆதரிக்கும் ஓர் இடமான சுங்கை பூலாய் காடு, பாதுகாக்கப்பட்ட நிலமாக, 1962-ஆம் ஆண்டு கெஜட் செய்யப்பட்டது.

2003-ஆம் ஆண்டு, இது சர்வதேச ஈரநிலமாக அறியப்பட்டு, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் பட்டியலில் வைக்கப்பட்டது.

ராம்சார் மாநாட்டில் கையெழுத்திட்ட நாடுகளில் மலேசியாவும் அடங்கும்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான சுங்கை பூலாயின் ஒரு பகுதியில், ஃபோரெஸ்ட் சிட்டி கோல்ஃப் ரிசார்ட் கட்டப்படுவது குறித்து, மலேசியாகினி ஒரு சிறப்பு செய்தியை அண்மையில் வெளியிட்டது.

அந்தக் கோல்ஃப் ரிசார்ட் திட்டம், மத்திய அரசாங்கத்திற்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்நிலப் பிரச்சனையில் தலையிட்டு, அதனைத் தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என சேவியர் கூறியிருந்தார்.