சொத்து விவரம் அறிவித்தார் பிஎஸ்எம் வேட்பாளர்; மற்ற வேட்பாளர்களும் அவ்வாறு செய்யக் கோரிக்கை

செமிஞ்யே தேர்தல்| செமிஞ்யே இடைத் தேர்தலுக்கான பார்டி சோசியலிஸ் மலேசியா(பிஎஸ்எம்) வேட்பாளர் நிக் அசிஸ் அபிக் அப்துல் அவருக்குள்ள சொத்துகளை இன்று பகிரங்கமாக அறிவித்தார். அதேபோல், இடைத் தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறார்.

“1999-இலிருந்தே பிஎஸ்எம் தான் ஊழலைச் சகித்துக்கொள்ளாத கட்சி, கையூட்டு வாங்காத கட்சி என்பதைக் காண்பிக்க இதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது”, என்றாரவர். நிக் அசிஸ் இன்று காலை பெக்கான் செமிஞ்யே-இல் ஒரு உணவகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

“நாங்கள் அரசியல் பதவியைக் கொண்டு எங்களையும் எங்களுக்கு வேண்டியவர்களையும் எங்கள் குடும்பத்தாரையும் வளப்படுத்திக்கொள்ள மாட்டோம்.

“புதிய அரசியல் மலர்ந்துள்ள புதிய மலேசியாவில் என்னுடைய முன்மாதிரியை மற்ற மூன்று வேட்பாளர்களும் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்”, என்றாரவர்.

நிக் அசிஸ் தன் சொத்து மதிப்பு ரிம15,750 என்று அறிவித்தார்.

உடம்புப் பிடித்துவிடும் மருத்துவமுறையில் தேர்ந்தவரான நிக் அசிஸ், தன்னுடைய மாத வருமானம் ரிம1,800 என்றார்.