செமிஞ்யே தேர்தல்| செமிஞ்யே இடைத் தேர்தல் வேட்பாளர் நியமனம் முடிந்ததோடு பக்கத்தான் ஹரப்பான் ஒரு செராமாவுக்கு ஏற்பாடு செய்தது. ஆனால், ஏற்பாட்டாளர்கள் முன் அனுமதி பெறவில்லை என்பதால் அந்த செராமா தொடர்ந்து நடக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
திடுமென அங்கு வருகை புரிந்த தேர்தல் ஆணைய(இசி) அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் செராமாவை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.
நேற்றிரவு தாமான் ஜெனாரிஸ் பசார் மாலாமில், ‘ஹரப்பான் இளைஞர் மேடை’ என்ற தலைப்பில் அந்த செராமாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக மலேசியா கெஜட் செய்தித்தளம் அறிவித்திருந்தது.
அதில் ஹரப்பான் வேட்பாளர் முகம்மட் அய்மான் சைனாலி கடைசியாக உரையாற்ற விருந்தார்.
அந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த Effort Malaysia என்னும் என்ஜிஓ-வின் தலைவரான அம்மார் பவுசி, செராமாவுக்கு அனுமதி பெறவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.
“சட்டத்தை நாம் மதிக்க வேண்டும்….அனுமதி பெறும் விவகாரம் எனக்குப் பழக்கமில்லாத ஒன்று. தவறு செய்தது நான்தான், ஹரப்பான் அல்ல”, என்றார்.