குலா: குறைந்தபட்சச் சம்பளத்தை என்னால் ஒருதலைப்பட்சமாக மாற்ற இயலாது

குறைந்தபட்சச் சம்பளம் ரிம1,100 என்பது தேசிய சம்பள மன்றத்தால் முடிவு செய்யப்பட்டது, அதை மாற்றும் அதிகாரம் தனக்கில்லை என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.

“அந்தத் தொகையை முடிவு செய்வது அமைச்சர் அல்ல. மன்றம்தான் அதை முடிவு செய்ய வேண்டும். பலருக்கு இன்னும் இது புரிவதில்லை. இதுதான் குறைந்தபட்ச சம்பளம் என்று முடிவு செய்யும் உரிமையோ அதிகாரமோ எனக்கில்லை”, என்று குலசேகரன் தெரிவித்ததாக மலாய் மெயில் கூறியது.

ஆனாலும், குறைந்தபட்சச் சம்பளத்தை ரிம1,500ஆக உயர்த்தும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் நோக்கத்தில் மாற்றமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, குறைந்தபட்ச சம்பளம் உயரலாமே தவிர குறையாது.

சில ஊடகங்கள், முதலாளிமார்கள் முறையிட்டதன் விளைவாக வெவ்வேறு துறைகளுக்கு வெவ்வேறு சம்பளம் என்று குறைந்தபட்சச் சம்பளமுறை திருத்தி அமைக்கப்படலாம் எனக் குலசேகரன் கூறியதாக இதற்குமுன் செய்தி வெளியிட்டிருந்தன.

எதுவாயினும், முதலாளிகள் குறைந்தபட்சச் சம்பளத்துக்குக் குறைவான சம்பளத்தைக் கொடுக்க இயலாது என்பதை அவர் வலியுறுத்தினார்.

“அதுதான் சட்டம்.ரிம1,100 சம்பளம் கொடுக்காதவர்கள் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படுவார்கள்”, என்றாரவர்

குறைந்தபட்சச் சம்பளம்தான் ரிம1,100. முதலாளிகள் அதற்கும் கூடுதலாகக் கொடுக்க விரும்பினால் தாராளமாகக் கொடுக்கலாம், தடையில்லை என்றும் குலசேகரன் கூறினார்.