பாசிர் கூடாங்கில் நச்சுக்கழிவுப் பொருளால் 200 பேருக்குமேல் பாதிக்கப்பட்டிருப்பதால் அங்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது.
பாசிர் கூடாங் எம்பி ஹசான் அப்துல் கரிம்(ஹரப்பான்) டேவான் ரக்யாட்டில்(மக்களவையில்) அவசரத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது பற்றி விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“இன்றே அத் தீர்மானம் விவாதிக்கப்பட வேண்டும்”, என்றும் அவர் வலியுறுத்தினார்.
இன்னொரு எம்பி , அஹமட் மஸ்லானும் (பிஎன் -பொந்தியான்), பாசிர் கூடாங்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
அதற்குப் பதிலளித்த எரிபொருள், தொழில்நுட்ப, அறிவியல், பருவநிலை மாறுதல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ இன், அவசரகால நிலை பிரகடனம் செய்யும் அதிகாரம் தன்னிடமில்லை என்று கூறி, விவகாரத்தை அதற்குப் பொறுப்பான குழுவின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.