பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி தனியார் துறையின் வேலைக்கு ஆள்சேர்க்கும் முறையை இன விவகாரமாக்கக் கூடாது என்று மசீச மகளிர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
அதன் தலைவர் ஹெங் சியாய் கை, தனியார்துறை ஆதாயம் தேடும் நோக்கம் கொண்டது என்பதால் திறமை பார்த்துத்தான் வேலை ஆள் எடுக்கிறது என்றார்.
“எனவே குறிப்பிட்ட வேலைக்கு என்ன தகுதி தேவையோ அது உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இங்கு இனம், சமயம் பார்க்கப்படுவதில்லை. யார் கூடுதல் தகுதி கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு வேலை கிடைக்கும். இது வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடந்து வரும் ஒன்று.
“இதில், தனியார்துறையில் வேலைக்கமர்த்தப்படும் இந்தியர் விகிதம் குறைவாக இருப்பதை இன விவகாரம் ஆக்கக் கூடாது. அது திறமை, தனிப்பட்டவர் ஆர்வம், போட்டிபோடும் திறன் முதலியவை சம்பந்தப்பட்ட சமாச்சாரம். இனச் சலுகைக்கு இங்கு இடமில்லை”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறி இருந்தார்.
வேதமூர்த்தி குறை சொல்வதை விடுத்து வாய்ப்புக் குறைந்தவர்களுக்கு வேலை கிடைக்க அவர்களின் திறன்களை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கிக் கொடுத்து உதவ வேண்டும் என்று ஹெங் ஆலோசனை கூறினார்.
“குறுகிய கண் கொண்டு பார்க்காதீர்கள். அது பிரச்னையைத் தீர்க்காது, இனங்களுக்கிடையில் அவநம்பிக்கையைத்தான் அதிகரிக்கும்.
“மேலும், தேசிய ஒற்றுமை அமைச்சரின் பணிக்கு அது முரணானதுமாகும்”, என்றாரவர்.
தனியார்துறை வேலைக்கு ஆள்சேர்ப்பதில் இனப் பாகுபாடு காட்டுவதாகவும் அதற்கு அரசாங்கம் தீர்வு காணும் என்றும் வேதமூர்த்தி கூறியது குறித்து கருத்துரைத்தபோது ஹெங் அவ்வாறு கூறினார்.