சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) விரிவான அதிகாரம் கொண்டவர்தான் ஆனாலும் அவரது அதிகாரம் அளவற்றதல்ல என்கிறார் ஒரு மூத்த வழக்குரைஞர்.
கிம் ஜொங்-நாம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டுள்ள தம் கட்சிக்காரர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த டோவான் தை ஹுவோங்கைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கக் கோரி தான் செய்துகொண்ட மனு நிராகரிக்கப்பட்டது ஏன் என்று சட்டத்துறைத் தலைவர் டாம்மி தாமஸ் விளக்கமளிக்க வேண்டும் என்று மூத்த வழக்குரைஞர் ஹிஸ்யாம் தே போ தெய்க் வலியுறுத்தினார்.
“சட்டத்துறைத் தலைவரின் அதிகாரம் விரிவானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது ஒன்றும் அளவற்ற அதிகாரமல்ல.
“அதற்கும் வரையறை உண்டு. சட்டத்துறைத் தலைவர் அதிகாரத்தை நியாயமாகவும் நேர்மையாகவும் பயன்படுத்த வேண்டும்”, என்று ஹிஸ்யாம் கூறினார்.
இந்தோனேசியரான சித்தி ஆயிஷாமீதான கொலைக்குற்றச்சாட்டை கைவிடுவதென தாமஸ் விரும்பினார், குற்றச்சாட்டு கைவிடப்பட்டது என்று இன்னொரு வழக்குரைஞர் ஷாருடின் அலி கூறியிருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது ஹிஸ்யாம் அவ்வாறு கூறினார்.
“இரு நாட்டு உறவுகளுக்கும் சட்டத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. இது முழுக்க முழுக்க சட்டத்துறைத் தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்ட விவகாரம்”, என ஷாருடின் கடந்த வியாழக்கிழமை மலேசியாகினி தொடர்புகொண்டபோது கூறினார்.
சித்தி ஆயிஷாவும் டோவானும் இன்னும் பிடிபடாமலிருக்கும் மேலும் நால்வரும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் – அன்னின் ஒருவழிச் சகோதரர் ஜோங்- நாமைக் கொன்றதாகக் கூட்டாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அக்குற்றச்செயல் நிகழ்ந்தது 2017-இல் கேஎல்ஐஏ-2-இல்.
அவ்விருவரும் எதிர்வாதம் செய்யும்படி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.
அதன் பின்னர், தாமஸ் இந்தோனேசிய அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க சித்தி ஆயிஷா வழக்கினின்றும் விடுவிக்கப்படுவதாகக் கூறினார்.
அதேபோல் டோவன்மீதான குற்றச்சாட்டையும் கைவிடச் செய்ய முயற்சி செய்யப்பட்டது. ஆனால், வெற்றி பெறவில்லை.
எனவேதான் ஹிஸ்யாம், சித்தி ஆயிஷாமீதான வழக்கைக் கைவிடவும் டோவான்மீதான வழக்கைத் தொடரவும் முடிவு செய்தது ஏன் என்பதற்குச் சட்டத்துறைத் தலைவர் காரணத்தைக் கூற வேண்டுமென்று வலியுறுத்தினார்.
“ஏஜி இந்தோனேசியருக்கும் வியட்நாமியருக்குமிடையில் வேறுபாடு காட்டுவது ஏன்?
“எந்த அடிப்படையில் முடிவெடுத்தீர்கள்”, என்று ஹிஸ்யாம் வினவினார்.