பாத்தாமில் 24 மணி நேரம்கூட இல்லை, ஜொகூர் எம்பி விளக்கம்

பாசீர் கூடாங் வட்டாரம், நச்சு மாசு பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், இந்தோனேசியா, பாத்தாம் சென்றதன் காரணத்தை, இன்று ஜொகூர் மந்திரி பெசார் (எம்பி) ஒஸ்மான் சப்பியான் விளக்கினார்.

முன்னமே திட்டமிடப்பட்ட பயணம் என்பதால், பாத்தாம் சென்றதாக ஒஸ்மான் தெரிவித்தார்.

ஜொகூர், இந்தோனேசியா சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக அப்பயணத்தை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.

“அது முன்னமே திட்டமிடப்பட்டிருந்த, பணி நிமித்தமாக மேற்கொள்ளப்பட்டப் பயணம். ஜொகூர் மற்றும் இந்தோனேசியா, குறிப்பாக பாத்தாம் தீவுக்கு இடையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான முயற்சி இது,” என அவர் விளக்கமளித்தார்.

இப்பயணம் 3 நாட்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்தாலும், பாசீர் கூடாங் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு, ஒரே நாளில் நிறைவு செய்யப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.

பாசீர் கூடாங் சம்பவத்தால், முன்னதாக திட்டமிடப்பட்ட சில சந்திப்புகளைத் தான் ஒத்திவைத்துள்ளதாகவும், சிலவற்றைத் தவிர்க்க முடியவில்லை என்றும் ஒஸ்மான் கூறினார்.

“‘2020 ஜொகூர் சுற்றுலா ஆண்டு’ தொடர்பான, முக்கிய சந்திப்பு என்பதால் இதனை தவிர்க்க முடியவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

24 மணி நேரத்திற்கும் குறைவாகவே, தான் பாத்தாமில் இருந்ததாகவும், கிம் கிம் ஆற்றைச் சுத்தம் செய்த குழுவினர், தனக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு, நிலவரங்களைத் தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.