இராகவன் கருப்பையா – கடந்த காலங்களில் நம் நாட்டுக்கு யார் அடுத்த பிரதமராக வருவார் எனும் விவரம் கிட்டதட்ட தெள்ளத் தெளிவான ஒரு விஷயமாக இருக்கும்.
அதாவது அம்னோ கட்சியின் தலைவர் நாட்டின் பிரதமராக இருக்கும் பட்சத்தில் அதன் துணைத் தலைவர் அடுத்த பிரதமருக்கான வரிசையில் முன் நிற்பார்.
அதனால்தான் அக்கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கும் 3 உதவித் தலைவர் பதவிகளுக்கும் எப்போதுமே போட்டி கடுமையாக இருக்கும்.
ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்நிலை முற்றாக மாற்றம் கண்டு, கடுகளவும் நம் சிந்தனைக்கு எட்டாத ஒருவர் கூட பிரதமராகலாம், அதுவும் எந்நேரத்திலும் நடக்கலாம் எனும் சூழல் நம் நாட்டிற்கு இப்போது பழகிப்போய்விட்டது.
எத்தகைய சூழலில் முஹிடின் மற்றும் சப்ரி போன்றோர் பிரதமர் பதவியில் அமர்ந்தார்கள் என்பது இதற்குத் தெளிவானச் சான்று. நாட்டில் அரசியல் குழப்பங்கள் நிலவிய போது, யாரும் எதிர்பாராத வகையில் அவர்களுக்கு ‘தங்கத் தட்டில்’ அரியணை அமைந்தது.
தற்போதைய பிரதமர் அன்வாரும் கூட கடந்த 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ‘நீயா நானா’ என பல நாள்கள் தொடர்ந்த இழுபறிக்குப் பிறகுதான் பிரதமரானார் என்பது நாம் எல்லாரும் அறிந்ததே.
தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் நாட்டின் 10ஆவது பிரதமர் யார் என்று யூகிக்க முடியாத அளவுக்கு குழப்பங்கள் நிலவியைதை நாம் இன்னும் மறக்கவில்லை.
அன்வார் 2 தவணைகளுக்கு பிரதமராக இருப்பாரா எனும் கணிப்புகள் ஓய்ந்து, தற்போது முதல் தவணையை நிறைவாக அவர் பூர்த்தி செய்வாரா என்கிற ஐயப்பாடுகள் எழத் தொடங்கிட்டதை நம்மால் காண முடிகிறது.
இன்னும் சுமார் இரண்டரை ஆண்டுகளில் நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும். ஆனால் இப்போதே பல அரசியல்வாதிகள் இதர அலுவல்களை புறம் தள்ளிவிட்டு தொகுதிகளுக்கு முண்டியடிப்பதில் கவனத்தை செலுத்தத் தொடங்கிவிட்டதைப் போல் தெரிகிறது.
அதே சமயம், தேர்தலுக்குப் பிறகு புதிய பிரதமர் ஒருவர் அரியணையில் அமருவதற்கான சாத்தியம் இருப்பதால் அந்தப் பதவிக்கும் சிலர் தங்களை தயார்படுத்திக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
அன்வார் தனது மகள் நூருல் இஸாவை ஏன் அவசர அவசரமாக கட்சியின் மேல் மட்டத்திற்கு உயர வகை செய்தார் என அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
அடுத்தத் தேர்தலில் பி.கே.ஆர். கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றால் அநேகமாக நூருலை நாட்டின் முதல் பெண் பிரதமராக அமர்த்த அவர் திட்டமிட்டுள்ளார் என ஒரு சாரார் கணிக்கின்றனர்.
எனினும் பி.கே.ஆர். கட்சி அதிக இடங்களில் பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அம்னோவும் கூட அதிக இடங்களில் வெற்றி பெறக் கூடிய சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது. அதன் இளைஞர் தலைவர் அக்மாலின் முரட்டுத்தனமான அரசியலால் மலாய்க்காரர் அல்லாதாரின் ஆதரவு அக்கட்சிக்கு பெருமளவில் சரிந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
அதே சமயம் முன்னாள் பிரதமர் நஜிப் முழு அரச மன்னிப்புப் பெற்று விடுதலையானால் கிஞ்சிற்றம் ஐயமில்லாமல் பிரதமர் பதவிக்கு அவர்தான் தகுதியுடையவராகக் கருதப்படுவார்.
அப்படி அவருக்கு விடுதலை கிடைக்கவில்லையென்றால், மொத்தமாக அரசாங்கம் மாறக் கூடிய வாய்ப்புதான் அதிகமாக உள்ளது.
ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் தீவிர ஏற்பாடுளை செய்துவருவது கண்கூடாகவே தெரிகிறது.
அக்கூட்டணியின் தரப்பில் முன்னாள் உள்துறையமைச்சரான பெர்சத்து கட்சியின் ஹம்சா ஸைனுடின் தனது நிலையை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் உண்மைதான்.
மொத்தத்தில், அடுத்த மாதமோ, அடுத்த ஆண்டோ, 16ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகோ யார்தான் நாட்டின் 11ஆவது பிரதமராக பொறுப்பேற்பார் என்று கண்ணுக்கு எட்டிய வரையில் தெரியவில்லை.