இராகவன் கருப்பையா – நம் சமூகத்தைச் சார்ந்த நிறைய பேர்கள் தொழில் செய்து முன்னேற வேண்டும் எனும் வேட்கையில் கடுமையாக உழைக்கின்ற போதிலும் பொருளாதாரம் ஒரு முட்டுக்கட்டையாகவே இருக்கிறது.
ஆண்கள் மட்டுமின்றி எண்ணற்ற பெண்களும் கூட இத்தகையச் சூழலில் தள்ளப்பட்டு கண்ணீரை மட்டுமே துணைக்கழைத்து செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகையோரில் ஒருவர்தான் பெரும் கனவுகளை சுமந்து சற்று வித்தியாசமானத் துறையில் கால் பதித்துள்ள ஹர்ஷினி கிருஷ்ணமூர்த்தி..
விதவிதமான சுவைகளில் கோப்பித் தூளையும் தேயிலைத் தூளையும் தயாரிக்க வேண்டும் எனும் எண்ணத்தில் பல மாதங்கள் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர், பிரமிக்கும் வகையிலான வெற்றியும் கண்டார்.
தற்பொழுது குறைந்தது 10 விதமான சுவைகளில் தேயிலைத் தூளையும் கோப்பித் தூளையும் தயாரித்துள்ள அவர் மேலும் அதிகமான சுவைகளை சேர்ப்பதற்கான ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
இந்தத் தூள் வகைகளை எந்த ஒரு ரசாயனக் கலப்பும் இல்லாமல் இயற்கையாகவே அவர் தயார் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது உற்பத்திக்கு, ‘வாம்பியா கோல்ட் ப்ரூ'(Vambiah Gold Brew) என்று அவர் பெயரிட்டுள்ளார்.
“ஏதாவதொரு தொழிலைத் தொடங்கி, அதனை அனைத்துலக நிலையில் புகழ் பெறச் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாகும்.”
‘ஸ்தார்பக்ஸ்'(Starbucks), ‘கெனாங்ஙா'(Kenanga), ‘ஸுஸ் கொஃபி'(Zus Coffee), கொஃபி பீன்(Coffee Bean), டீ லிவ்(Tea Live) மற்றும் ‘ஆல் டவுன் வைட் கொஃபி'(Old Town White Coffee) போன்ற நிறுனங்களைப் போல நானும் சுவை பானங்களைத் தயாரிக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாகும்.”
“அதன் அடிப்படையில்தான் மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் தொழில்துறையை தேர்வு செய்து எனது பட்டப்படிப்பை நிறைவு செய்தேன்.”
“தொழில் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்றால் மூலதனம் வேண்டுமே, என்பதால் சிறிது காலம் ஒரு பெருளகத்திலும் பிறகு காப்புறுதி நிறுவனம் ஒன்றிலும் பணிபுரிந்து பணத்தை சேமிக்கத் தொடங்கினேன்.”
எனினும் சேமித்த பணம் போதவில்லை என்பதால் அரசியல்வாதிகளின் உதவியை நாட முற்பட்ட போதுதான் தனக்குத் தொடரான ஏமாற்றங்கள் ஏற்பட்டன என்று மிகுந்த வேதனையுடன் கூறுகிறார் ஹர்ஷினி.
“நான் உதவி நாடிச் சென்ற அரசியல்வாதிகளில் நிறைய பேர்கள் எனது தன்னம்பிக்கையை சிதைத்து, உற்சாகத்தைக் குறைத்து, ஊக்கத்தைக் கெடுத்தார்களேத் தவிர உதவிக் கரம் நீட்டத் தயாராய் இல்லை.”
“நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே, ‘துணிந்து நில், தொடர்ந்து செல்,’ என உறுதுணையாக இருந்து இன்று வரையில் விடாமல் எனக்கு ஊக்கமளித்து வருகின்றனர்.”
நான் அனுகிய ஆசியல்வாதிகளில் கிட்டதட்ட எல்லாருமே, ‘நீங்கள் என் தொகுதியின் வாக்காளர் இல்லை, எனவே உதவ இயலாது,’ என தட்டிக் கழித்தனர்.
“இவ்வாண்டுக்கான ஒதுக்கீடு முடிந்துவிட்டது, போதவில்லை, என கடந்த 2024ஆம் ஆண்டில் மித்ரா பொறுப்பாளர் கூறினார். அதற்கு அடுத்த ஆண்டு அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.”
“நீங்கள் பி40 தரப்பைச் சேர்ந்தவர் இல்லை. எனவே பொருளாதார அமைச்சைதான் நீங்கள் அனுக வேண்டும்,” என நம் சமூகத்தைச் சார்ந்த அமைச்சர் திசைத் திருப்பினார்.
நான் வாக்காளராக பதிவு பெற்றுள்ள தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட, ‘ஒதுக்கீடு முடிந்துவிட்டது,’ என்றுதான் கூறினார்.
தனது தயாரிப்புகளை தற்பொழுது நாடு தழுவிய நிலையில் சுமார் 50 கடைகளுக்கு மட்டுமே ஹர்ஷினி வினியோகம் செய்து வருகிறார்.
பொருளாதார உதவி இருக்குமேயானால் தயாரிப்புக்குத் தேவையான நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்து, மிகப் பெரிய அளவுக்கு இத்தொழிலை கொண்டுச் செல்ல முடியும் என மிகுந்த உற்சாகத்தோடும் தளராதத் தன்னம்பிக்கையுடனும் விவரிக்கிறார் இந்த இளம் தொழில் முனைவர்.
























