பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்களை நிபந்தனையின்றி ஏற்க அம்னோ தயார்

பெர்சத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட பல தலைவர்கள் அம்னோவில் இணையுமாறு அம்னோ பொதுச்செயலாளர் அஸ்ரப் வஜ்டி டூசூகி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் பெர்சத்து கட்சியால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட யாரையும் எந்த நிபந்தனையும் இன்றி மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள அம்னோ தயாராக இருப்பதாக அஸ்ரப் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் ஆரம்பத்தில் அம்னோவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இப்போது தாங்கள் உண்மையாகச் சேர வேண்டிய இடத்திற்கே (தாய் வீட்டிற்கே) திரும்பலாம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று, பெர்சத்து கட்சி தனது இளைஞர் பிரிவு துணைத் தலைவர் பாயிஸ் ரஹ்மத், சுங்கை தியாங் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் காமிஸ் மற்றும் சுகா மெனாந்தி சட்டமன்ற உறுப்பினர் ஜோவாஹிர் அப் கானி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியது.

ரசாக் கெடா மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும், ஜோவாஹிர் கெடா மாநில விவசாயம், தோட்டங்கள் மற்றும் போக்குவரத்து குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றனர்.

பெர்சத்து கட்சி மேலும் ஏழு தலைவர்களை இரண்டு தவணைகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. அவர்கள்: பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அகமட் மான் (கோலா செபெத்தாங்) மற்றும் சையத் லுக்மான் ஹக்கிம் சையத் ஜின் (செண்டரோ); பேராக் நாடாளுமன்ற உறுப்பினர் நோர்டின் அகமட் இஸ்மாயில் (லூமுட்); பஹாங் நாடாளுமன்ற உறுப்பினர் காலிப் அப்துல்லா (ரொம்பின்); கிளந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் இக்மால் ஹிஷாம் அப்துல் அஜீஸ் (தானா மேரா); திரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரோசோல் வாஹிட் (உலு திரங்கானு) மற்றும் கிளிர் நோர் (கெத்தேரே) ஆகியோர் ஆவர்.

தற்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களில் இக்மால் மற்றும் ரோசோல் ஆகியோர் மிக முக்கியமான பெர்சத்து தலைவர்கள் ஆவர்; இவர்கள் இருவரும் முன்னதாக மத்திய அரசாங்கத்தில் துணை அமைச்சர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் அம்னோவைச் சேர்ந்தவர்கள், பின்னர் பிப்ரவரி 2019-இல் பெர்சத்துவில் இணைந்தனர். கட்சித் தலைவர் முஹ்யிதின் யாசினுடனான தலைமைத்துவப் போட்டியின் உச்சகட்டத்தின் போது, கடந்த பிப்ரவரி மாதம் பெர்சத்துவில் இருந்து நீக்கப்பட்ட ஹம்சா சைனுதீனின் தீவிர ஆதரவாளர்களாக இவர்கள் இருவரும் செயல்பட்டு வந்தனர்.

 

-fmt