அரசாங்கம் வன்தொடர்தலை (ஒருவரை அவரது விருப்பத்திற்கு மாறாக பின்தொடர்வதை) ஒரு குற்றச்செயலாக்கும் சட்டத்தை விரைவில் கொண்டுவர வேண்டும் என்று கஸ்தூரி பட்டு(பக்கத்தான் ஹரப்பான் -பத்து கவான்) கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இப்போதைய அரசாங்கம் முந்தைய அரசாங்கம் செய்யத் தவறிய ஒன்றைச் செய்துகாட்டி தான் பெண்கள் நலன் நாடும் அரசு என்பதை நிறுவ வேண்டும் என்றவர் கூறினார்.
“முந்தைய அரசாங்கம் செய்யாத ஒன்றை ஹரப்பான் செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது. வன்தொடர்தலை ஒரு குற்றச்செயலாக்குங்கள்”, என இன்று நாடாளுமன்றத்தில் அரச உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்ட கஸ்தூரி கூறினார்.
பின்தொடரப்படும் பெண்கள் பெரும்பாலும் கொலை செய்யப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த மாதம் சட்ட விவகார அமைச்சர் லியு வுய் கியோங், ஒருவரை அவரது விருப்பத்திற்கு மாறாக பின்தொடரும் செயலை ஒரு குற்றச் செயலாக்க இவ்வாண்டுக்குள் சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியிருந்தார்.
வன்தொடர்தலைக் குற்றமாக்குவது பற்றி பிஎன் அரசாங்கத்திலும் பேசப்பட்டதுண்டு.ஆனால், பேச்சோடு நின்று விட்டது.