உள்துறை அமைச்சர், முஹிடின் யாசின், தேச நிந்தனைச் சட்டம் 1948 இன்னும் நடப்பில் இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நீக்கப்படும்வரை அது பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும், ஒரு முக்கியமான சிக்கலைக் கையாள்வதில், அதிகாரிகளின் தேவை மற்றும் கொள்கைகளைப் பொறுத்து அது அமையும் என்றும் அவர் சொன்னார்.
“சட்டப்படி, நீக்கப்படும் வரை அது பயன்பாட்டில் இருக்கும்.
“எந்தவொரு தரப்பும் அதனை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம், ஆனால் இப்போது, சிலர் வெளியிடும் அறிக்கைகள் பதட்ட நிலையை உருவாக்கும் வகையில் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
“முடியாட்சி, இனம் மற்றும் மதம் தொடர்பான விமர்சனங்களை, நாம் பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று இன்று காஜாங்கில், 229-வது சிறைச்சாலை தினக் கொண்டாட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அச்சட்டத்தின் பயன்பாடு பற்றி அறிக்கை வெளியிட்ட, பிரதமர் துறை இலாகாவின் அமைச்சர் லியூ வுய் கியோங் பற்றி கேட்டபோது, அதனை தாம் மதிப்பதாகவும், ஆனால் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விருப்பத்தைப் பொறுத்தது என்றும் அவர் சொன்னார்.