இயோ : பாசீர் கூடாங்கில் 46 இடங்கள் மாசு ஆபத்தில் உள்ளன

ஜொகூர், பாசீர் கூடாங்கில் மொத்தம் 46 இடங்களில், மாசு ஆபத்து சாத்தியக்கூறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் இயோ பீ யின் கூறியுள்ளார்.

சுங்கை கிம் கிம்மில், இரசாயணக் கழிவு மாசுபாட்டின் ஆதாரங்களைத் தேடும் பணியின்போது, செயற்கைக்கோள் தரவுகளின் மூலம் அதிகாரிகள் இதனைக் கண்டறிந்துள்ளனர்.

“அந்த 46 இடங்களும், உள்நாட்டு கழிவுகள் அகற்றும் தளமா அல்லது திட்டமிடப்பட்ட கழிவுப்பொருள் (அகற்றும்) இடமா என சரியான எண்ணிக்கை என்னிடம் இல்லை,” என்று, நேற்று, கோத்தா இஸ்கண்டாரில், அறிவியல் ஆய்வுக் குழுவின் விரிவான அறிக்கையை வழங்கிய பின்னர், நிருபர்கள் அவர் பேசினார்.

இருப்பினும், சுங்கை கிம் கிம் வாயு மாசுபாட்டிற்கு, அவை காரணமல்ல என்பதனையும் இயோ வலியுறுத்தினார்.

பாசிர் கூடாங்கில் மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்து தொழில்துறைப் பகுதிகளிலும், மாசுபட்டுள்ள ஆறுகளை அடையாளம் காண, அமைச்சு ஒரு மதிப்பீட்டுக் குழுவை அமைக்கும் என்று இயோ கூறினார்.

எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் (மீஸ்டெக்கின்) அமைச்சின் கீழ், எதிர்காலத்தில் அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

-பெர்னாமா