பாலஸ்தீனர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்

இராகவன் கருப்பையா – ‘வழியில் கிடந்த கோடரியை காலில் போட்டுக் கொண்ட கதை’யாகத்தான் உள்ளது மலேசியாவின் நிலை.

இஸ்ரேல் – ஹம்மாஸ் போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோரில் காயமடைந்த 40 பேர் உள்பட மொத்தம் 127 பேரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இங்கு அழைத்து வந்த மலேசியா அதன் பலனை தற்போது அனுபவிக்கிறது.

அரசாங்கத்தின் அந்த முடிவில் நிறைய பேருக்கு திருப்தி இல்லை எனும் போதிலும், பரிவின் அடிப்படையில் சிகிச்சைக்காக அவர்கள் இங்கு அழைத்து வரப்பட்டதாக பிரதமர் அன்வார் அப்போது சமாதானம் கூறினார்.

ஆனால் இப்போது நடப்பது என்ன? ‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வதைப் போல்’ உள்ளது அந்த பாலஸ்தீனர்களின் போக்கு. ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’ எனும் குரல்தான் நமக்கு ஞாபகம் வருகிறது.

தற்காப்பு அமைச்சின் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள், வெளியே சென்று சுற்றிப் பார்க்க அனுமதி வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொருட் சேதத்தையும் கூட ஏற்படுத்திய அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீண்டும் ‘பரிவு’ எனும் அடிப்படையில் அவர்கள் மீது சட்டம் பாயவில்லை.

தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனும் மமதையில் தற்போது 2ஆவது தடவையாக அராஜகச் செயலை அவர்கள் அரங்கேற்றியுள்ளது வேதனை கலந்த கோபத்தைதான் நமக்கு உண்டு பண்ணுகிறது.

இம்முறை படுக்கை விரிப்புகளை தீயிட்டுக் கொளுத்தி சேதப்படுத்திய அவர்கள், சொந்த நாட்டுக்குத் தங்களை திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களுக்கு உதவி செய்பவர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடும் இவர்களுடையப் போக்கு ஹம்மாஸ் தீவிரவாதிகளைத்தான் நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

பாலஸ்தீனின் அண்டை நாடுகளான இதர அரபு தேசங்களே இவர்களை கண்டு கொள்ளவில்லை. எனினும் அன்வார் இவர்கள் மீது பரிவு காட்டி 2 ஆகாயப் படை விமானங்களை அனுப்பி சிகிச்சைக்காக இங்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

ஆனால் இங்கு இவர்கள் நடந்து கொள்ளும் விதம் துளியளவும் நன்றியுணர்வை பிரதிபளிப்பதாக இல்லை என்பது வருத்தமான விஷயம்.

தலைநகரில் பாலஸ்தீனத் தூதரகம் உள்ளது. எனவே தங்களுடைய ஆதங்கத்தையும் தேவைகளையும் அத்தூதரகம் வழியாகத்தான் அவர்கள் தெரிவிக்க வேண்டும். அதனை விடுத்து நாகரீகமற்ற வகையில் நடந்து கொள்வது எவ்வகையிலும் ஏற்புடையதாக இல்லை.

கடந்த சனிக்கிழமை இவர்கள் செய்த ஆர்ப்பாட்டம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பொது மக்களுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஏன் அவர்களைத் தொடர்ந்து இங்கு நாம் வைத்திருக்க வேண்டும், என பொது மக்கள் கேள்வி எழுப்புவதிலும் நியாயம் உள்ளது.

எனவே கூடிய விரைவில் அவர்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என வெகுசன மக்கள் கருத்துத் தெரிவித்த வண்ணமாக உள்ளனர்.

அவர்களின் தாய் நாடு போராட்ட உணர்வும், அவர்கள் அடைந்த துன்பமும் வேறுபட்டவை, நமது உணர்வுடன் மாறுபட்டவை. அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மலேசிய தனது தார்மீக கடமையை ஆற்ற வேண்டும். அதே வேளையில் அவர்களின் தாய் நாடு கோரிக்கையை ஆதரிக்கும் மலேசிய, அதன் அடிப்படையில் தனது இராஜதந்திர செயல்பாட்டையும், அமைதி கோரும் அடிப்படையில் எடுக்க வேண்டும்.