மலேசியா ரோமாபுரி சட்டத்தை ஏற்றுக்கொண்டிருப்பதற்கும் இனப் பாகுபாட்டுக்கு எதிரான அனைத்துலக ஒப்பந்தத்தை அங்கீகரிக்க முயன்றதற்கும் எதிராகக் கடுங் குறைகூறல்கள் எழுந்திருந்தாலும் அனைத்துலக ஒப்பந்தங்களில் உள்ள “நல்லது” மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
“நிபந்தனைகளுடன்தான் ஒப்பந்தங்களை அங்கீகரிக்கிறோம்”, என்றாரவர். இன்று கேரித் தீவில் செம்பனை எண்ணெயை நேசிக்கும் இயக்கத்தைத் தொடக்கி வைத்த பின்னர் பிரதமர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“ரோமாபுரிச் சட்டத்தில் உள்ள சிலவற்றை நம் நாட்டில் செயல்படுத்த இயலாது. எடுத்துக்காட்டுக்கு, ரோமாபுரிச் சட்டம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உரிமையை எல்லாருக்கும் கொடுக்கிறது.
“இப்போது ஆண்கள் ஆண்களை மணம் செய்கிறார்கள், பெண்கள் பெண்களை மணக்கிறார்கள். திருமணம் செய்து கொண்டு என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அப்படிச் செய்பவர்கள் வேடிக்கை மனிதர்கள். நாம் வேடிக்கை மனிதர்களாக இருக்க விரும்பவில்லை. எனவே, அதை நாம் ஏற்க மாட்டோம். நல்லதை மட்டுமே ஏற்போம்”, என்றாரவர்.
மலேசியா ரோமாபுரிச் சட்டத்தை ஏற்றுக்கொண்டிருப்பதைத் தம் பிறந்த நாள் செய்தியில் குறைகூறியிருந்த ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டர், அதில் கையொப்பமிட்டதன்வழி புத்ரா ஜெயா கூட்டரசு அரசமைப்பை மீறிவிட்டதாகக் கூறியிருந்தார்.