ரந்தாவில் நாளை முன்கூட்டிய வாக்களிப்பு

நாளை ரந்தாவில் முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறுவதாக அறிவித்த தேர்தல் ஆணையம் அதில் அங்குள்ள 118 முன்கூட்டிய வாக்காளர்களில் 110 பேர் வாக்களிப்பார்கள் எனக் கூறியது.

அவர்களில் 74பேர் இராணுவத்தினர் அல்லது அவர்களின் கணவர்/மனைவிமார். அவர்கள் செண்டாயான் விமானத் தளத்தில் வாக்களிப்பர். அதே வேளை போலீஸ் படையைச் சேர்ந்த 36பேர் ரந்தாவ் போலீஸ் நிலையத்தில் வாக்களிப்பார்கள் என இசி தலைவர் அசிசான் ஹருன் ஓர் அறிக்கையில் கூறினார்.

“எஞ்சியுள்ள முன்கூட்டிய வாக்காளர்கள் எண்மர் இராணுவத்தினர், அவர்கள் அஞ்சல்வழி வாக்களிப்பார்கள்”, என்றாரவர்.

இரண்டு வாக்களிப்பு நிலையங்களும் காலை எட்டு மணிக்குத் திறக்கப்பட்டு நண்பகலில் மூடப்படும்.

வாக்களிப்பு முடிந்ததும் வாக்குப் பெட்டிகள் போலீஸ் நிலைய லாக்-அப் அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். சனிக்கிழமை அவை வாக்குகள் எண்ணப்படும் மையமான எஸ்ஜேகேசி ஸ்ரீ செண்டாயான் கொண்டு செல்லப்படும்.