மன்னரை அவமதித்தாக 91 போலீஸ் புகார்கள்

‘சாபா-சரவாக் மெர்டேகா’ முகநூல் பக்கத்தில் இடப்பட்ட ஒரு பதிவு பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா-வை அவமதிப்பதாக அமைந்துள்ளது என்று கூறப்படுவதன் தொடர்பில் போலீஸ் நேற்றுவரை 91 புகார்களைப் பெற்றுள்ளது.

அவ்விவகாரம் நிந்தனைச் சட்டம் 1948 பிரிவு4(1) (ஏ)-இன்கீழ் விசாரிக்கப்படுவதாக போலீஸ் படைத் தலைவர் முகம்மட் பூஸி ஹருன் ஓர் அறிக்கையில் கூறினார்.

“அதன்கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் (அந்த முகநூல் கணக்கை வைத்திருப்பவருக்கு) ரிம5,000-க்கு மேற்போகாத அபராதம் அல்லது மூன்றாண்டு வரைக்குமான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்”, என்றாரவர்.

பொதுமக்கள் சமூக ஊடகங்களையும் மற்றவகை தொடர்புச் சாதனங்களையும் தவறாகப் பயன்படுத்தி அமைதியையும் நல்லிணக்கத்தையும் கெடுக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று பூஸி அறிவுறுத்தினார்.

-பெர்னாமா