முன்கூட்டியே பணி விலகுகிறார் சுஹாகாம் தலைவர்

மனித உரிமை ஆணைய(சுஹாகாம்)த் தலைவர் ரசாலி இஸ்மாயில், அவரது பணிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு வாரங்கள் உள்ள வேளையில் பதவி விலகினார்.

ரசாலி 2016இல் அப் பதவியில் நியமிக்கப்பட்டார். அவரது மூன்றாண்டுக்காலப் பணி ஏப்ரல் 27-இல் முடிவுக்கு வருவதாக இருந்தது.

தமது பதவிவிலகல் கடிதத்தைப் பேரரசருக்கும் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் அனுப்பி விட்டதாகக் கூறிய ரசாலி, ஆணைய உறுப்பினர்களுக்கும் தம் முடிவைத் தெரியப்படுத்தி விட்டதாகக் கூறினார்.

“மூன்றாண்டுக் காலம் பணி செய்து விட்டேன். நல்லவிதமாக பணியாற்றியதாகவே நம்புகிறேன். இனி, பரிந்துரைக்கும் மேலே ஏதாவது செய்யலாமே என்று நினைக்கிறேன்.

“மனித உரிமைக்காக பணியாற்றுவது என்பது பரிந்துரை செய்தல் என்ற அளவில் நின்று போகிறது. இப்போதைக்கு இது போதும்.

“வெறும் பரிந்துரை என்ற நிலையே தொடருமானால் அதனால் உண்மை நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க சுஹாகாமுக்குப் போதுமான அவகாசம் அளிப்பதற்காக பணிக்காலம் முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே பணியிலிருந்து விலகிக் கொண்டதாக ரசாலி சொன்னார்.

இனி, நேரடியாகக் களத்தில் இறங்கிப் பணி செய்யப்போவதாக அவர் கூறினார்.

“ஒரு மலேசியனாகவும் மலாய்க்காரனாகவும் செயல்படப் போகிறேன். ஓரங்கட்டப்பட்ட மலாய்க்காரர்களுக்கு உதவுவேன்”, என்றார்.

ரசாலியின் தலைமையில் சுஹாகாம், மனித உரிமைமீறல்கள் நிகழ்ந்தபோது, மீறியது அரசாங்கமாக இருந்தாலும்கூட கண்டிக்கத் தயங்கியதில்லை.

பல விவகாரங்களில் சுஹாகாம் அரசாங்கத்துக்குத் தனது பரிந்துரைகளை வழங்கியது உண்டு. அவற்றில் ஒன்று எல்லா வகை இனப் பாகுபாடுகளையும் ஒழிக்கும் அனைத்துலக ஒப்பந்தம்(ஐசெர்ட்). அதை அங்கீகரிக்குமாறு சுஹாகாம் பரிந்துரைத்ததை முதலில் ஏற்றுக்கொண்ட பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம், என்ஜிஓ-களும் பாஸ், அம்னோ ஆகிய அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததும் மனம் மாறியது.

கடந்த டிசம்பரில் சுஹாகாம் வருடாந்திர மனித உரிமை தினத்தைக் கொண்டாட முனைந்தபோது அந்நாளில் ஐசெர்ட்- எதிர்ப்புப் பேரணி நடப்பதாக இருந்ததால் ம்னித உரிமைக் கொண்டாட்டத்தை வேறொரு நாளில் வைத்துக்கொள்ள்மாறு போலீஸ் ஆலோசனை கூறியது.