‘நாளையும் நான்தான் எம்பி, நான் சாகாமலிருந்தால்’ -பேராக் எம்பி

பேரா மந்திரி புசார் அஹமட் பைசல் அஸ்மு, அவரைப் பதவி இறக்க சதி நடப்பதாக வதந்திகள் உலவி வந்தாலும் அவை பற்றி கிஞ்சிற்றும் கலக்கமடையாமல் ”நானே மந்திரி புசார்” என்பதை வலியுறுத்துகிறார் .

“இதை முன்பே கூறியிருக்கிறேன். பதவியேற்ற முதல் நாளிலிருந்தே என்னைக் கவிழ்க்க பலர் முயல்கிறார்கள், ஆனால், நீங்கள்தான் பார்க்கிறீர்களே நான்தான் இன்னமும் மந்திரி புசாராக இருக்கிறேன். நாளையும் நானே மந்திரி புசார்- நான் சாகாதிருந்தால்.

“ நானும் மாநில ஆட்சிக்குழுவில் உள்ள என் சகாக்களும் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்”, என்றவர் ஈப்போவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பைசலைக் குறைகூறி சமூக வலைத்தளங்களில் வலம்வரும் ஓர் ஒலிக்கீற்று (பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் அசிஸ் பாரி பதிவேற்றம் செய்தது எனக் கூறப்படுகிறது) குறித்து எதிர்வினையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

அந்த ஒஇக்கீற்றில் பேசுபவர், மந்திரி புசார் கூட்டங்களுக்குத் தாமதமாகத்தான் வருகிறார் என்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறார் என்றும் குறை கூறியிருந்தார்.

அம்னோ, இவ்விவகாரத்தில் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளது.