வாங் கெலியான் ஆர்சிஐ|| 2015-இல் தாய்- மலேசிய எல்லை அருகில் பெர்லிஸ், வாங் கெலியானில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆள்கள் தங்குவதற்கான முகாம்களையும் சவக்குழிகளையும் கண்டுபிடித்த போலீஸ் படையினர் மனித எலும்புக் கூடுகளையும் கண்டெடுத்தனர்.
இன்று வாங் கெலியான் அரச விசாரணை ஆணையத்தில் சாட்சியமளித்த முன்னாள் சிறப்புப் பிரிவு(எஸ்பி) அதிகாரி ஏஎஸ்பி ஜமாலுடின் ஷா முகம்மட் ஜவான், தன் குழுவினர் 2015 ஆகஸ்ட் 15-இல், வாங் கெலியானில் உள்ள புக்கிட் வாங் புர்மாவுக்கு நடந்தே சென்றதாகக் கூறினார்.
“நாங்கள் எலும்புக் கூடுகளை முகாம்களில் கண்டோம், சவக்குழிகளில் அல்ல. முகாம்கள் மரங்களை நட்டுவைத்து துணியால் மூடப்பட்டிருந்தன. அங்கேதான் எலும்புக்கூடுகளைக் கண்டோம்.
“ஒரு மேடைமீது ஆறு எலும்புக்கூடுகளைப் பார்த்தோம்”, என்றாரவர்.
எலும்புகள் தரையில் சிதறிக் கிடந்ததாக அவர் கூறினார்.
அங்கு 20 சவக்குழிகள் இருப்பதும் தெரிய வந்தது. அவற்றைத் தோண்டிப் பார்த்ததில் 20 பிணங்கள் கிடைத்தன என்றார்.
எலும்புக்கூடுகள் சவக்குழிகள் ஆகியவற்றின் படங்கள் ஆணையக் குழுவுக்குக் காண்பிக்கப்பட்டன.