ரந்தாவ் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து முகம்மட் ஹசானே தொடர்ந்து அம்னோ தலைவராக இருக்க வேண்டும் என்கிறார் அக்கட்சியின் உதவித் தலைவர் முகம்மட் காலிட் நோர்டின்.
ஏனென்றால், வாக்காளர்களை மீண்டும் பிஎன்னுக்கே வாக்களிக்கும்படிச் செய்வதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று காலிட் ஓர் அறிக்கையில் கூறினார்.
”அவரின் பண்புகள் மலாய்க்கார்களையும் மலாய்க்காரர்-அல்லாதாரையும் கவர்ந்துள்ளன.
“அம்னோ அதன் வருங்காலத் தலைமைத்துவம் குறித்து முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என நினைக்கிறேன். கட்சிக்கு மறுவாழ்வளித்து அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிக்கு இட்டுச் செல்லக்கூடிய தலைவரை, அம்னோ-பாஸ் ஒத்துழைப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய ஒரு தலைவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
“ரந்தாவ் இடைத் தேர்தல் வழி நாட்டை வழிநடத்த எப்படிப்பட்ட தலைவர் தேவை என்பதை மலாய்க்காரர்களும் மலாய்க்காரர்-அல்லாதாரும் தெளிவாக உணர்த்தி விட்டார்கள்”, என்று காலிட் கூறினார்.
அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி விடுப்பில் இருப்பதால் முகம்மட் இப்போது கட்சியின் இடைக்காலத் தலைவராக உள்ளார்.
அம்னோவுக்கும் பிஎன்னுக்கும் தலைவர்களாக வருவோர் தொலைநோக்கும் தகுதியும் உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்று காலிட் கூறினார்.
“உயர்க்குடியில் பிறந்தவர்களே தலைவர்களாக இருக்க வேண்டும் என்ற நினைப்பிலிருந்து அம்னோ விடுபட வேண்டும்”, என்றாரவர்.