கல்வியாளர்களை அவமதிப்பதா? சைபுடின்மீது பாய்கிறார் ரீசால்

ரோம் சாசன விவகாரத்தில் புத்ரா ஜெயாவின் கருத்துடன் ஒத்துப்போகாத பேராசியர்களை வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா அவமதித்து விட்டதாக அம்னோ எம்பி ஒருவர் கடுமையாகச் சாடினார்.

அக்கல்வியாளர்களை “கங்கோங் பேராசிரியர்கள்” என்று கூறும் அளவுக்கு சைபுடின் தரம்தாழ்ந்து போயிருக்கக்கூடாது என்று கப்பளா பத்தாஸ் எம்பியான ரீசால் மரைக்கான் நயினா மரைக்கான் கூறினார்.

“ரோம் சாசன விவகாரத்தில் புத்ரா ஜெயாவின் கருத்துடன் மாறுபட்ட பேராசிரியர்கள் சிலரை வெளியுறவு அமைச்சர் கங்கோங் பேராசிரியர்கள் என்று கூறியது அவர்களை அவமதிப்பதுடன் தேவையில்லாத ஒன்றுமாகும்.

“அவர் இவ்வளவு தரம்தாழ்ந்து போயிருக்கக் கூடாது”, என்று ரீசால் ஓர் அறிக்கையில் கூறினார்.

சமூக ஆர்வலரும் கருத்துச் சுதந்திரத்துக்காக போராடுவதில் பேர் பெற்றவருமான அமைச்சர் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கத் தவறி விட்டாரே என்று ரீசால் சீறியிருந்தார்.