சட்டவிரோத நெகிழிக் கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப அரசு முடிவு

மலேசியாவுக்குள் கடத்திவரப்படும் நெகிழிக் கழிவுகளை அவை எங்கிருந்து வந்தனவோ அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்புவதென அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

பேசல் சட்டத்தைப் பயன்படுத்தி அவ்வாறு செய்யப்படும் என்று வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் சுரைடா கமருடின் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

பேசல் சட்டம் அபாயமிக்கக் கழிவுப் பொருள்களை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குக் கொண்டுசெல்வதைத் தடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஓர் அனைத்துலகச் சட்டமாகும்.

ஸ்பேய்ன் நாட்டிலிருந்து 24 கொள்கலன்களில் அபாயமிக்க நெகிழிக் கழிவுகள் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதை அடுத்து சுரைடாவின் அறிக்கை வந்துள்ளது.

வளர்ந்த நாடுகள் அவற்றின் நெகிழிக்கழிவுகளை முன்பு சீனாவுக்கு அனுப்பி வந்தன. சீனா, கடந்த ஆண்டு அதற்குத் தடை விதித்ததும் மலேசியாவில் கொண்டு வந்து கொட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன.