மக்களுக்காகக் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைப்போம்- ஜோகூர் ஆட்சியாளர்

ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டர், பிரதமர் டாக்டர் மகாதிருக்குச் சமாதான தூது அனுப்பி இருப்பதுபோல் தோன்றுகிறது.

பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள கலந்துரையாடல் நடத்துவதே நல்லது என சுல்தான் இன்று பிற்பகல் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

“மாறுபாடுகள் அல்லது கருத்துவேறுபாடுகள், குறிப்பாக ஜோகூர் மாநிலத்துக்கும் கூட்டரசு அரசாங்கத்துக்குமிடையில் அப்படி ஏதுமிருக்குமானால், அவற்றை ஒதுக்கி வைப்பதே நல்லது என்பது என் கருத்து.

“இன்னும் சொல்லப்போனால், எல்லாருடைய நன்மைக்காகவும், அதிலும் குறிப்பாக மக்களுக்காக, நேரில் சந்தித்து பண்பட்ட முறையில் மனம் விட்டுப் பேசுவதே நல்லதாகும்”, என்றாரவர்.