அன்வாரைப் பிரதமராக்கும் வாக்குறுதியை நினைவுபடுத்துகிறார் பிகேஆர் தலைவர்

பிகேஆர் இளைஞர் உதவித் தலைவர் சைட் பாட்லி ஷா சைட் ஒஸ்மான், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அமைக்கப்பட்டபோது அன்வார் இப்ராகிம் பிரதமராக்கப்படுவார் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நினைவுபடுத்தினார்.

முதிர்ந்த வயதிலும் நாட்டை வழிநடத்தும் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு நன்றி தெரிவித்த சைட் பாட்லி, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கும் திட்டமொன்றும் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

“இரண்டு, இரண்டரை ஆண்டுகளில் பதவியை மாற்றிக்கொடுப்பது பற்றிச் சிந்திக்க வெண்டும்.

“மாற்றம் மூன்றாண்டுகளுக்குப் பிறகு நிகழ்வதுபோல் இருக்கக் கூடாது, அவசரப்பட்டும் அதைச் செய்து விடக்கூடாது. அரசாங்கத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படாத வகையில் அதற்குத் திட்டமிட வேண்டும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

மாற்றத்தைத் தாமதப்படுத்தினால் புதிய பிரதமருக்கு ஆட்சியின் கடைசிக்காலத்தில் காரியங்களைச் செய்து முடிப்பது சிரமமாக இருக்கும் என்று சைட் பாட்லி கூறினார்.

பிரதமர் பொறுப்புகளை மாற்றிக் கொடுப்பது குறித்து மகாதிர் நேற்று தெரிவித்த கருத்துத்தான் சைட் பாட்லியை இப்படி ஓர் அறிக்கை வெளியிட வைத்திருக்கிறது.

நேற்று, தம் ஆட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி வெளிநாட்டு ஊடகங்களிடம் பேசிய டாக்டர் மகாதிர், முந்தைய நிர்வாகம் விட்டுச்சென்ற பிரச்னைகளுக்குத் தீர்வுகண்ட பிறகுதான் பதவியிலிருந்து இறங்கப் போவதாகக் கூறியிருந்தார்.

அது எப்போது என்று கேட்டதற்கு, “அது மூன்றாண்டுகளோ, இரண்டு ஆண்டுகளோ எனக்குத் தெரியாது. நான் இடைக்காலப் பிரதமர்தான்”, என்றார்.