அன்வாரை முன்னாள் கைதி என்பது தப்பா? தகியுடின் கேள்வி

பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை ஒரு முன்னாள் கைதி என்று குறிப்பிட்டதில் தவறில்லை என்கிறார். அது தவறு என்று சொல்வோர் நீதிமன்ற வழக்கைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றார்.

“என்னை மன்னிப்புக் கேட்கச் சொல்வோர் சட்டத்தையும் உண்மைகளையும் சரிபார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

“நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரின் நிலை என்னவென்பது உங்களுக்கே தெரியும்” என்றவர் சொன்னார்.

வழக்கின் உண்மை நிலவரங்கள் அறியாமல் பிகேஆர் தலைவரை அப்படி குறிப்பிட்டிருக்கப் போவதில்லை என கோத்தா பாரு எம்பி கூறினார்.

சாபா, சண்டகானில் புதன்கிழமை இரவு ஒரு செராமாவில் உரையாற்றிய தகியுடின், அன்வாரைப் போன்ற “முன்னாள் கைதி” ஒருவர் பிரதமராக வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமா என்று வினவினார்.

அன்வார் குற்றவாளியா என்றெல்லாம் கேள்வி எழுப்பக்கூடாது. ஏனென்றால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது கூட்டரசு நீதிமன்றம்.

“ஒருவர் சிறை சென்று வந்தால் அவரது நிலை என்னவென்பது நமக்குத் தெருயும். காலம் பூராவும் அவர் கைதி என்றுதான் கருதப்படுவார்”, என்றார்.