இராகவன் கருப்பையா – மலேசிய போலீஸ்படை இவ்வட்டாரத்திலேயே சிறந்த காவல்துறைகளில் ஒன்று என போற்றப்படுவது நமக்கெல்லாம் பெருமை தரும் ஒரு விஷயமாகும்.
இருந்த போதிலும் சில அரசியல்வாதிகளின் அறிவிலித்தனமான செயல்பாடுகளுக்கும் அவர்கள் கொடுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் இருப்பதை அத்துறை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.
அண்மையில் பினேங் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை நாடளாவிய நிலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கட்டிட நிர்மாணிப்புப் பொருள்களை விற்பனை செய்யும் ஒரு வர்த்தகர், எதிர்வரும் தேசிய தினத்தையொட்டி தனது கடைக்கு வெளியே கொடியேற்றிய போது எதேச்சையாக அத்தவறு நிகழ்ந்துள்ளது.
இத்தவற்றை வேண்டுமென்றே தான் செய்யவில்லை என்றும், கொடி கம்பத்தை அளவெடுத்த போது எதேச்சையாக இது நிகழ்ந்துள்ளது எனவும் விளக்கமளித்த அவர், அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் நம் நாட்டில் முரட்டுத்தனமான அரசியலுக்குப் பெயர் போன அம்னோ இளைஞர் தலைவர் அக்மால் இவ்விவகாரத்தை வழக்கம் போல பூதாகரமாக்கி குளிர்காயத் தொடங்கிவிட்டார்.
அந்த வர்த்தகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவர் கடுமையாகத் தண்டிக்கப்படவில்லை என்றால் எதிர்வரும் வியாழக்கிழமை தனது சகாக்களுடன் அக்கடைக்கு முன் கூடி எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக அவர் மிரட்டியுள்ளார்.
இந்த மிரட்டல் முற்றிலும் ஒரு அரசியல் ‘டிராமா’தான் என்று எல்லாருக்கும் தெரியும். ஏனெனில் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய அளவுக்கு இது ஒன்றும் ஒரு பயங்கரவாதச் செயல் இல்லை.
ஆனால் நமது காவல்துறையினர் சற்று விவேகமாக சிந்தித்திருந்தால் அக்கடைக்குச் சென்று அந்த வர்த்தகருக்கு ஆலோசனை கூறிவிட்டு கடந்து சென்றிருக்கலாம். அவரை கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றிருக்க வேண்டிய அவசியமே இல்லை.
நம் நாட்டில் அதிக அளவிலான குற்றச் செயல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் இதுபோன்ற சிறிய விஷயங்களுக்கு எல்லாம் அத்துறை அதன் பொன்னான நேரத்தை விரயமாக்குவது அவ்வளவு ஏற்புடையதாகத் தெரியவில்லை.
எண்ணற்ற கொலையாளிகள், கொள்ளையர்கள், கடத்தல்காரர்கள் மற்றும் ‘மேகா’ ஊழல் பேர்வழிகள் எல்லாம் இன்னும் பிடிபடாமல் வெளியே உளாவிக் கொண்டிருக்கின்றனர் என்பது எல்லாருக்கும் தெரியும்.
சற்று சிரத்தையெடுத்து அவர்களை விரட்டிப் பிடித்து நீதிக்கு முன் நிறுத்துவதற்கான முயற்சிகளை நமது காவல்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும்.
கொடி தலைகீழாக ஏற்றப்படுவது பெரும்பாலும் ஏதேச்சையாக நிகழும் சம்பவம்தான். யாரும் வேண்டுமென்றே அப்படி செய்யமாட்டார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.
நாடு தழுவிய நிலையில், அரசாங்க அலுவலகங்கள் உள்பட நிறைய இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அறியாமையால் நடக்கும் இத்தகைய சிறிய தவறுகள் இயல்பான ஒன்றுதான்.அண்மையில் நெகிரி செம்பிலான் போட்டிக்சனில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கூட இது போன்ற ஒரு சம்பவம் தற்செயலாக நிகழ்ந்துள்ளது. இவர்களையெல்லாம் போய் விரட்டி விரட்டிப் பிடித்து குற்றப் பதிவு செய்வது நமக்கு சற்று வியப்பாகத்தான் உள்ளது.
சீன நகரமொன்றில் நிகழ்ந்த இதே போன்ற ஒரு சம்பவத்தை அந்நாட்டின் காவல்துறையினர் எவ்வாறு கையாண்டார்கள் என்பதை சித்தரிக்கும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
துணிமணிகளை வியாபாரம் செய்யும் ஒரு கடைக்கு வெளியே ஏற்றப்பட்டிருக்கும் அந்நாட்டின் தேசியக் கொடிகளில் ஒன்று தலைகீழாக இருப்பதைப் பார்த்த இரு இளம் காவல்துறை அதிகாரிகள் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாகச் சென்று அதனை சரிசெய்கின்றனர்.
அது மட்டுமின்றி அவ்விருவரும் அதே இடத்தில் நின்று அக்கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘சல்யூட்’ அடித்தக் காட்சி நமக்கு நெகிழ்ச்சியூட்டும் வகையில் உள்ளது.
இதற்கிடையே பேராக் பாரிட் புந்தாரில் உள்ள சிம்பாங் லீமா காவல் நிலையத்தில் கூட நமது தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருந்தது. அந்நிலையத்தின் ஊழியர் ஒருவர் எதேச்சையாக இத்தவற்றை செய்துவிட்டார் என கெரியான் மாவட்ட காவல்துறைத் தலைவர் மசுக்கி சமாதானம் சொல்ல முற்பட்டார்.
சம்பந்தப்பட்டவர் விசாரிக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் அவர் கைது செய்யப்பட்டதாகவோ அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவோ தெரியவில்லை. அப்படியென்றால், ‘மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா,’ எனும் கேள்வி எழுத்தான் செய்கிறது.
ஆக, பாரபட்சமின்றி நீதியை நிலைநாட்ட கடப்பாடுக் கொண்டுள்ள தமது காவல்துறையினர், ஆசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு செவிசாய்க்காமல் இது போன்ற விவகாரங்களில் விவேகத்துடன் கடந்துச் செல்வது சிறப்பாக இருக்கும்.
























