நோன்பு நேரத்தில் உணவருந்துவோரைப் பிடிப்பதற்கு மாறுவேடத்தில் அமலாக்க அதிகாரிகள்
செகாமாட் முனிசிபல் மன்றம் (எம்பிஎஸ்) அதன் எல்லைக்குள் நோன்பு நேரத்தின்போது உணவருந்தும் முஸ்லிம்களைப் பிடிப்பதற்கு அதன் அமலாக்க அதிகாரிகளைச் சமையல்காரர்களாவும் மேசைப் பணியாளர்களாகவும் உணவகங்களில் நிறுத்தி வைத்துள்ளது. இதற்காகவே உணவக வேலை தெரிந்தவர்களாகப் பார்த்து அது அமலாக்க அதிகாரிகளாக வைத்துள்ளது.
எம்பிஎஸ் தலைவர் முகம்மட் மஸ்னி வாஹிமான், செகாமாட் முனிசிபல் எல்லைக்குள் 185 உணவகங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
“எம்பிஎஸ்-இன்கீழ் உள்ள 15 இடங்களில் 185 லெசென்ஸ்- பெற்ற உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. செகாமாட், பண்டார் புத்ரா ஐஓஐ, செகாமாட் பாரு, ஜாலான் செகாமாட் முவார், தாமான் யயாசான், பூலோ கசாப், ஜெமெந்தே, பத்து அனாம், பண்டார் உத்தாமா ஆகியவை அவற்றில் அடங்கும்.
“இந்த வேலைக்காகவே கருநிறம் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். அவர்கள் இந்தோனேசியர்கள் போலவும் பாகிஸ்தானியர்போல் பேசும் திறன் பெற்றவர்கள். அவர்களை வாடிக்கையாளர்கள் சமையல்காரர்கள் என்றும் பரிமாறுவோர் என்றும் நம்பி விடுவார்கள்”, என்றாரவர்.