கிளந்தானில் ஓராங் அஸ்லிகள் 15பேரின் திடீர் இறப்புக்கு வருத்தம் தெரிவித்த முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், இப்படிப்பட்ட சாவு இக்காலத்தில் நடந்திருக்கக் கூடாது என்றார்.
குவா மூசாங், கம்போங் கோலா கோ-வில் பதேக் பூர்வ குடிமக்களைப் பாதித்த நோய் குறித்து முக நூலில் டாக்டர் சுப்ரமணியம் கருத்துத் தெரிவித்திருந்தார். ஓராங் அஸ்லி கிராமத்தில் 15வதாக பலியான மூன்று வயது குழந்தை தட்டம்மை நோயால் இறந்ததாக கோத்தா பாருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
“சுகாதார அமைச்சு ஓராங் அஸ்லிகளின் இறப்புக்குத் தட்டம்மை காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளது. நல்ல நிலையில் உள்ளவர்களுக்குத் தட்டம்மை வந்தால் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் அது தானாகவே மறைந்து விடும் என்பது நமக்குத் தெரிந்ததே.
“ஆனால், ஓராங் அஸ்லிகள் விசயத்தில் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட நோய்க்கு எதிராக ஓராங் அஸ்லிகளால் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போனதென்றால் அதற்குக் காரணம் ஊட்டச் சத்துக் குறைபாடு, நோய்-எதிர்ப்புச் சக்தியும் குறைந்திருக்கலாம். மற்றபடி அவர்கள் இறக்கக் காரணமில்லை, என்றாரவர்.
தட்டம்மை நோயால் அவர்களின் நோய்-எதிர்ப்புச் சக்தி குறைந்து போயிருக்கலாம் என்று சுப்ரமணியம் கூறினார்.