நச்சு வாயு கசிவு: ஒன்பது பாலர் பள்ளிகள் மூடப்பட்டன

ஜோகூர், பாசிர் கூடாங்கில் நச்சு வாயு கசிவினால் தேசிய ஒற்றுமைத் துறையின் ஒன்பது பாலர் பள்ளிகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பாலர் பள்ளி மாணவர்களின் நலன் கருதி அவை மூடப்பட்டன என்று பிரதமர்துறை துணை அமைச்சர் டாக்டர் முகம்மட் பாரிட் ரபிக் கூறினார்.

நேற்று தொடங்கி வியாழக்கிழமைவரை அவை மூடப்பட்டிருக்கும்.

“ஜோகூர் தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுத் துறை, நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வரும். தேவை என்றால் அடைப்பு நீட்டிக்கப்படும் . அது குறித்து அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும்”, என்றாரவர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பெற்றோர் பிள்ளைகளை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பாரிட் கேட்டுக்கொண்டார்.

நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்து உதவியை நாட வேண்டும் என்றாரவர்.