குவான் எங் அலுவலகத்தில் சீனமொழி எழுத்து இருப்பதில் என்ன தவறு? கிட் சியாங் உதவியாளர் கேள்வி

சமூக ஊடகங்களில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் அலுவலகத்தில் இரண்டு வரி சீனக் கவிதை தோரணமாக தொங்க விடப்பட்டிருப்பதைக் குறைகூறியிருப்பவருக்கு ஷாரெட்சான் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அந்தச் சமூக ஊடகப் பதிவாளர் அந்த அலுவலகம் பெய்ஜிங்கில் இருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது என்றும் அது தேசிய மொழியை அவமதிக்கிறது என்றும் கூறியிருந்தார்..

ஷாரெட்சான் அதை ஏற்கவில்லை.

“பகாசா மலாயுவை உயரத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன் நான். நம்பவில்லை என்றால் என்னுடைய முந்தைய கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள்.

“இரண்டு வரி கவிதை ஒன்று தேசிய மொழியை அவமதிக்கும் விவகாரமாக மாறியது எப்படி என்று எனக்கு விளங்கவில்லை”, என்றவர் இன்று காலை அவரது முக நூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் உதவியாளரான ஷாரெட்சான், குறைகூறுவோர் அந்த இரண்டு வரி கவிதை என்ன சொல்கிறது என்பதை அறிந்துகொள்ள முனைந்தார்களா என்றும் வினவினார்.

“அந்த இரண்டு வரிகளில் சொல்லப்பட்டிருப்பது இதுதான், ‘மக்கள் சச்சரவின்றியும் குடும்பம் அமைதியாகவும் இருந்தால் தொழில் முயற்சிகள் ஆதாயத்தைக் கொண்டு வரும். எந்த நாடு வெற்றி பெற்று வளப்பத்துடனும் இருக்கிறதோ அது மகிழ்ச்சியை நோக்கி நடைபோடும்’.

“சீன வீடுகளின் முகப்பில் இந்த வரிகளைப் பார்க்கலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு ‘ஓங்’ (நல்லதிர்ஷ்டம்) கிட்டட்டும் என்று ஆசி கூறும் வரிகள் அவை.

“நமக்கு இதில் நம்பிக்கையில்லாதிருக்கலாம். நிதி அமைச்சருக்கும் அதில் நம்பிக்கை இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால், அது சீனர்களின் கலாச்சாரம்”, என்றாரவர்.

மலாய்க்காரர்- அல்லாத அமைச்சர்கள் அவர்களின் அலுவலகங்களில் அவர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பொருள்களை வைத்துக்கொள்ளக் கூடாதா என்றும் ஷாரெசான் வினவினார்.

“மலேசியக் கலாச்சாரத்தில் சீனக் கலாச்சாரமும் ஒரு கூறுதானே”, என்று ஷாரெட்சான் கூறினார்.