கொள்முதல் முறைகேடுகள் தொடர்பாக மற்றொரு மூத்த ராணுவ அதிகாரியை MACC விசாரித்து வருவதாக நம்பப்படுகிறது.
ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இராணுவ கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள்குறித்து, 50 வயது மதிக்கத் தக்க அந்த நபர் விரைவில் வாக்குமூலம் அளிப்பார் என்று பெரிட்டா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
“MACC மேலும் பல அதிகாரிகளின் ஈடுபாட்டையும் கண்டறிந்து வருகிறது, இதன் மூலம் அவர்களின் கொள்முதலில் பரந்த அளவிலான ஊழல் வலையமைப்பு இருப்பதைக் காட்டுகிறது,” என்று அந்த வட்டாரம் நேற்று மலாய் மொழி நாளிதழுக்குத் தெரிவித்தது.
அறிக்கையின்படி, MACC தலைமை ஆணையர் அசாம் பாக்கி, ஆயுதப்படைகளில் உள்ள மற்ற மூத்த அதிகாரிகள்மீதான விசாரணைகளை உறுதிப்படுத்தினார்.
“அனைத்து தரப்பினரும் அதிகாரிகளுக்கு முழுமையான விசாரணை நடத்த இடம் அளிக்க வேண்டும் என்றும், விசாரணை செயல்முறையைப் பாதிக்கக்கூடிய எந்த ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி
அசாம் விரிவாகக் கூற மறுத்துவிட்டாலும், 2009 ஆம் ஆண்டு MACC சட்டத்தின் பிரிவு 17(a) இன் கீழ் ஒரு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகவும், இது தங்களுக்காகவோ அல்லது மற்றொரு நபருக்காகவோ லஞ்சம் வாங்குவதையோ அல்லது பெற முயற்சிப்பதையோ குற்றமாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.
அதே சட்டத்தின் பிரிவு 24(1) இன் கீழ், 20 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை மற்றும் ரிம10,000 அபராதம் அல்லது லஞ்சத் தொகையின் ஐந்து மடங்கு, எது அதிகமோ அது தண்டனையாக விதிக்கப்படும்.
‘தங்கக் கட்டிகள், கார், பணம்’
இன்று முன்னதாக, இராணுவ கொள்முதல் டெண்டர்களில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் விசாரணையில் MACC தங்கக் கட்டிகள், உயர் செயல்திறன் கொண்ட கார் மற்றும் ரிம 6.9 மில்லியன் மதிப்புள்ள பல வெளிநாட்டு நாணயங்களில் பணத்தை பறிமுதல் செய்ததாகப் பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம், போர்ட் டிக்சன் பெர்சத்து தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷஹாரின், தனக்கு அநாமதேயமாகப் பெறப்பட்ட ஆவணங்களின் தடயவியல் மதிப்பாய்வில், ஒரு மூத்த இராணுவ அதிகாரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் கணக்குகளில் பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் மாதாந்திர பரிவர்த்தனைகள் வரவு வைக்கப்பட்டுள்ளதைக் காட்டியதாகக் கூறினார்.
அவரது புகார்கள் காரணமாக, அடுத்த ஆயுதப் படைத் தலைவராக ஹஃபிசுதீன் ஜந்தனின் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது, இருப்பினும் அந்த நியமனம் ஆயுதப் படை கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அரச ஒப்புதல் பெறப்பட்டது.
ஹஃபிசுதீன் ஜன்தன்
டிசம்பர் 27 அன்று, விசாரணை நடைபெற அனுமதிக்க ஹஃபிசுதீன் விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது, 2009 MACC சட்டத்தின் பிரிவு 17(a) இன் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து, டிசம்பர் 29 அன்று, எம்ஏசிசி அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சொந்தமான ஆறு வங்கிக் கணக்குகளை முடக்கியது.
இந்த வாரத் தொடக்கத்தில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஹஃபிசுதீன் மற்றும் அவரது இரண்டு மனைவிகள் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம், நடந்து வரும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஹஃபிசுதீனுக்கு எதிராக ஏழு நாள் காவலில் வைக்க உத்தரவைப் பிறப்பித்தது.
‘பார்ட்டி யேயே’
இராணுவத் தளங்களின் வளாகத்திற்குள் நடைபெறும்” பார்ட்டி யேயே” எனப்படும் அநாகரிக விருந்துகளில் இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டதாக இணையத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, மற்றொரு ஊழல் தொடர்பாக இராணுவம் விசாரணையை எதிர்கொள்கிறது.
சில சமூக ஊடக பயனர்களும் இது போன்ற நிகழ்வுகளின் படங்களை வெளியிடத் தொடங்கினர், மேலும் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சில இணைய பயனர்கள், கீழ்நிலை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளுக்கு மதுபானங்களையும், முகாம்களுக்கு வெளியே இருந்து பெண்களையும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறினர்.
ஜனவரி 8 ஆம் தேதி, பாதுகாப்புக்கான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு, ஊழல்கள்குறித்து விளக்கமளிக்க பாதுகாப்பு அமைச்சகத்தையும் ஆயுதப்படைகளையும் வரவழைப்பதாகக் கூறியது.

























