குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் கைருல் ட்ஸாய்மி டாவுட், பிலிப்பினோ தடுப்புக் கைதிகள் தாங்கள் தடுத்து வைக்கப்பட்ட புககிட் ஜாலில் குடிநுழைவுத் தடுப்பு மையத்தின் நிலைமை மோசமாக இருந்ததாகக் கூறியிருப்பதை மறுக்கிறார்.
“அங்குக் கொடுக்கப்பட்ட உணவு தரக்குறைவானது விலங்குகள் உண்ணத்தான் உகந்தது என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள 14 முகாம்களில் உணவுக்காக குடிநுழைவுத் துறை 2019-இல் ரிம80 மில்லியன் ஒதுக்கியுள்ளது. ஒரு ஆளுக்குச் சராசரியாக ரிம 12.
“உணவு தயாரித்துக் கொடுப்பதற்காக ஒருவர் நியமிக்கப்பட்டுத் தடுப்புக் கைதிகளுக்கு ஒரு நாளைக்கு நான்கு வேளை உணவு வழங்கப்படுகிறது.
“உணவின் தரம் மோசமாக இருந்தால் பலர் பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமே”, என்று ட்ஸாய்மி கூறியதாக த ஸ்டார் கூறியது.
புக்கிட் ஜாலிலில் தடுத்து வைக்கப்பட்ட பெண்கள் தாங்கள் அச்சம் கொண்டிருந்ததாகவும் தொல்லைகளுக்கு உள்ளானதாகவும் முறையிட்டிருக்கிறார்கள்.
அவர்களுடன் இருந்த சிறார்கள் சோர்ந்து போனார்கள் என்றும் அவர்கள் புகாரிட்டுள்ளனர்.
அக்குற்றச்சாட்டுகளை ட்ஸாய்மி மறுத்தார்.
புக்கிட் ஜாலில் தடுப்பு முகாம் குழந்தைகளுக்குத் தேவையான மழலைகள் பள்ளி, அவர்கள் விளையாடுவதற்கான இடம் போன்ற வசதிகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார்
“எல்லா முகாம்களிலும் தடுப்புக் கைதிகளுக்குச் சிகிச்சை அளிக்கவும் உடல் நலனைக் கண்காணிக்கவும் மருத்துவ உதவி அதிகாரி ஒருவர் உள்ளார்”. என்றாரவர்.
அங்கு நிலைமை மோசம் எம்று இதுவரை ஒரு புகாரும் வந்ததில்லை என்றும் அவர் சொன்னார்.