2015-இல் கனி பட்டேலும் மற்றவர்களும் நீக்கப்பட்டதன்மீது நடவடிக்கை இல்லை

2015-இல் அப்போதைய சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேலும் வேறு சில அரசு அதிகாரிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பிரதமர்துறை அமைச்சர் ஹனிபா மைடின் நேற்று நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.

2015 ஜூலைக்கும் ஆகஸ்டுக்குமிடையில், 1எம்டிபி ஊழல்மீது விசாரணை நடத்திய எம்ஏசிசி அதிகாரிகள் அந்த ஆணையத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்கள். கனியும் இப்போதைய உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் உள்பட சில அமைச்சர்களும் பதவிநீக்கம் செய்யப்பட்டார்கள். அது பற்றித்தான் துணை அமைச்சர் குறிப்பிடுகிறார்.

லிம் கிட் சியாங்( ஹரப்பான் -இஸ்கண்டார் புத்ரி)-இன் கேள்விக்குப் பதிலளித்த ஹனிபா, “இப்போதைய அரசாங்கம் எந்த நடவைக்கையும் எடுக்கப் போவதில்லை.

“எதிர்காலத்தில் அவசியம் ஏற்பட்டால் அல்லது 1எம்டிபி ஊழல்மீதான விசாரணையைத் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான தெளிவான சான்றுகள் அல்லது தகவல்கள் கிடைக்குமானால் நடவடிக்கை எடுப்பது பற்றி அரசாங்கம் ஆலோசிக்கும்”, என்றார்.