அரசாங்கம் ஆவணங்கள் வைத்திராத குடியேறிகளுக்கு அடிக்கடி பொது மன்னிப்பு வழங்கும் போக்கு அந்நியர்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு ஊக்கமளித்து விடுகிறது என சிறப்பான நாளைய தினத்துக்கான மையம் (சென்பெட்) கூறியது.
“அரசாங்கம் திரும்பத் திரும்ப பொது மன்னிப்பு வழங்குவது முறையான ஆவணங்கள் வைத்திராதவரிடையே எப்படியும் தங்கள் பிரச்னைக்கு இறுதியில் தீர்வு கண்டு விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வலுப்பட உதவுகிறது.
“இதைவிட மோசமாக, ஒவ்வொரு தடவை பொதுமன்னிப்புத் திட்டத்தை அறிவிக்கும்போதும் ‘இதுதான் கடைசித் தடவை’ என்றும் குறிப்பிடப்படும்”, என்று சென்பெட்டின் கூட்டுத் தலைவர் கான் பிங் சியு ஓர் அறிக்கையில் கூறினார்.
நேற்று, உள்துறை அமைச்சர் முகைதின் யாசின், அரசாங்கம் ஆக்ஸ்ட் முதல் நாள் தொடங்கி டிசம்பர் 31 வரை பொது மன்னிப்புத் திட்டம் ஒன்றை வழங்கும் என்று அறிவித்தார்.
அத் திட்டத்தின்படி முறையான ஆவணங்கள் வைத்திராத குடியேறிகள் ரிம700 தண்டம் கட்டிவிட்டு. நாடு திரும்பலாம். அவர்களின் பயணச் செலவை அவர்களின் தூதரங்கள் ஏற்கும்.