அம்னோ-பாஸ் சாசனம் கையெழுத்தாகும் நிகழ்வுக்குப் பெருங் கூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது

வார இறுதியில் அம்னோவும் பாஸும் அரசியல் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்வைக் காணக் குறைந்தது 10ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்ரா உலக வாணிக மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்களுக்கு நடைபெறும் Himpunan Penyatuan Ummah (உம்மா ஒற்றுமை ஒன்றுகூடல்) எனப்படும் அந்நிகழ்வில் அம்னோ தலைவர்களும் பாஸ் தலைவர்களும் சந்திப்பார்கள் என த ஸ்டார் கூறியது.

அவ்விரு கட்சிகளும் தங்களுக்கிடையிலான நீண்டகால பகையை ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடப் போவதை அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் உறுதிப்படுத்தினார்.

“இது ஒரு அரசியல் ஒத்துழைப்புத்தான், அரசியல் கூட்டணி அல்ல”, என்றாரவர்.

எல்லாக் கட்சியினரும் இனத்தவரும் சமயத்துவரும் வரலாம், ஒத்துழைப்பில் பங்கேற்கலாம் என்றவர் சொன்னார்.

ஆனால், மசீச தலைவர் இதில் கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிகிறது. இது அம்னோவும் பாஸும் சம்பந்தப்பட்ட நிகழ்வு. தங்களுக்கு அங்கு வேலை இல்லை என்று அவர் ஏற்கனவே கூறிவிட்டார்.

மஇகா தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் அந்நிகழ்வுக்குச் செல்வார். ஆனால், ஒரு பார்வையாளராக மட்டும்தான் அவர் செல்கிறார். அங்கு நடக்கும் எதிலும் கலந்துகொள்ள மாட்டார்.