புகைமூட்டம்: சரவாக்கில் அபாய நிலையில் ஏபிஐ; நாடு முழுக்க 500 பள்ளிகளுக்குமேல் மூடப்பட்டன

சரவாக்கில் இன்று காலை காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு மோசமான நிலையில் இருந்தது. கூச்சிங் அருகில் ஸ்ரீ அமானில் அது அபாயமிக்க எல்லையைத் தொட்டது.

சுற்றுசூழல் துறையின் கணிப்பில் ஸ்ரீஅமானில் நேற்றிரவு 201 ஆக இருந்த ஏபிஐ இன்று காலை எட்டு மணிக்கு 365 என உயர்ந்தது.

கூச்சிங்கில் ஏபிஐ 219 ஆக இருந்தது. இது ஆரோக்கியத்துக்குக் கேடு செய்யும் நிலையாகும். ஐஎல்பி மீரி(107), மீரி (126), சமாலாஜு( 113, பிந்துலு(129), மூக்கா (140), சிபு(166), சரிகாய் (148), சமாராஹான்(160) என சரவாக்கில் பல இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.

தீவகற்ப மலேசியாவில் இரண்டு இடங்களில்- சிலாங்கூரில் ஜொகான் சித்தியாவிலும் நெகிரி செம்பிலானில் போர்ட் டிக்சனிலும்- ஏபிஐ 232 ஆகவும் 211 ஆகவும் பதிவாகி இருந்தது.

காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்ததால் சரவாக்கிலும், சிலாங்கூரிலும், புத்ரா ஜெயாவிலும் போர்ட் டிக்சனிலும் பள்ளிகளை மூடும்படி உத்தரவிடப்பட்ட்டது.

சிலாங்கூரில் 145 பள்ளிகள் மூடப்படுவதாகக் கல்வி அமைச்சு அதன் முகநூல் பக்கத்தில் கூறியது.

நெகிரி செம்பிலான் கல்வித் துறை போர்ட் டிக்சனில் எல்லாப் பள்ளிகளும் இன்று மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்தது.

புகைமூட்டம் காரணமாக நாடு முழுக்க 531 பள்ளிகள் மூடப்படுவதாகவும் அதனால் 363,991 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்திருந்தது.

சிலாங்கூர், போர்ட் டிக்சன் மட்டுமல்லாமல் சரவாக்கில் 298 பள்ளிகளும் புத்ரா ஜெயாவில் 25 பள்ளிகளும் புகைமுட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளன.