அன்வார்: எல்லா கிராமங்களிலும் குடியிருப்புகளிலும் வறுமையைப் பார்க்கிறேன்

தேசிய வறுமை விகிதம் 2016-இல் அறிவிக்கப்பட்டதைப்போல் 0.4 விழுக்காடு அல்ல என்றும் அது உண்மையில் 15 விழுக்காடு என்றும் ஐநா ஆய்வு ஒன்று கூறியிருப்பதால் அரசாங்கம் வறுமை விகிதத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.

மலேசியாவின் வறுமை விகிதத்தைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், உண்மையான நிலவரத்தைக் கண்டறிய சரியான வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

“கிட்டத்தட்ட எல்லாக் கிராமங்களிலும் பெல்டா குடியிருப்புகளிலும் ஏழை மக்களைப் பார்க்கிறேன். எனவே, அரசாங்கம் அறிவித்த 0.4 விகிதத்தைவிட வறுமை விகிதம் உயர்வாகத்தான் இருக்க வேண்டும்.

“வறுமை மற்றும் மனித உரிமைகள் மீதான ஐநா சிறப்பு அதிகாரி பேராசிரியர் பிலிப் அல்ஸ்டோன் மலேசியாவில் வறுமை ‘தெளிவாகக் காணக் கிடக்கிறது’ என்றும் வறுமை விகிதம் 15 விழுக்காடாக இருக்கலாம் என்று கூறியது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நானும் நினைக்கிறேன்”, என்றார்.