கம்போங் பாருவில் 90 விழுக்காட்டு நில உரிமையாளர்கள் நிலத்தை விற்க ஒப்புக்கொள்கிறார்கள்?

கம்போங் பாரு நில உரிமையாளர்களில் 90 விழுக்காட்டினர் அரசாஙகம் கொடுக்க முன்வந்த ஒரு சதுர அடிக்கு ரிம850 என்னும் விலைக்கு நிலத்தை விற்க முன்வந்தார்கள் என்று ஊடகங்களில் வெளிவந்த செய்தி சரியல்ல என்கிறார் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சமாட்.

நிலத்தை விற்பதற்கும் கம்போங் பாரு மேம்பாட்டுத் திட்டத்துக்கும் 90 விழுக்காட்டு உரிமையாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்பது சரிதான் என்று கூறிய காலிட், ஆனால், நிலத்துக்குக் கூடுதல் விலை கொடுக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாகும் என்றார்.

“அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்தான். ஆனால் அரசாங்கம் கொடுக்க முன்வந்த விலையைவிட அதிகம் எதிர்பார்க்கிறார்கள்”, என்று காலிட் நேற்று ஷா ஆலாமில் கூறினார்.

கம்போங் பாரு நிலத்துக்கு அரசாங்கத்தால் கூடுதல் விலை கொடுக்க இயலாது, அது மேம்பாட்டைப் பாதிக்கும் என்றாரவர்.

“அதிக விலை கொடுத்து நிலம் வாங்கினால், அதில் கட்டப்படும் வீடுகளை அதிக விலைக்கு விற்க வேண்டிவரும். இது அப்பகுதியை மலாய்க்காரர் பகுதியாக நிரந்தரமாக வைத்திருக்கும் நோக்கத்தைப் பாதிக்கும்”, என்றார்.