ஏழைகளைச் சென்றடையாத வளத்தால் பயனில்லை- ஹசான் கரிம்

பக்கத்தான் ஹரப்பான் முன்வைத்துள்ள நாட்டின் வளத்தைப் பகிர்ந்துகொள்ளும் 2030 தொலைநோக்குத் திட்டம்(எஸ்பிவி2030) வளம் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டு அது பி40 தரப்பினரையும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என பாசிர் குடாங் எம்பி ஹசான் கரிம் வலியுறுத்தினார்.

“2020 தொலைநோக்குத் திட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. மலேசியா ஒரு வளர்ந்த நாடாக மாறத் தவறிவிட்டது”, என ஹசான் ஓர் அறிக்கையில் கூறினார்.

அந்தத் தோல்வியிலிருந்து மீண்டு நாட்டை மேம்படுத்த ஹரப்பான் அரசாங்கம் எஸ்பிவி2030 திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதை வரவேற்பதாக அவர் கூறினார்.

ஆனால், மலேசியத் தொழிலாளர்களின் சம்பளம் உயர வேண்டும், அது உயராவிட்டால் எஸ்பிவி2030 திட்டத்தால் பயனில்லை என்றவர் எச்சரித்தார்.

“வருமானத்தைப் பொறுத்தவரை உயர் நிலையில் உள்ளவர்களுக்கும் பி40 தரப்பினருக்குமிடையில் இடைவெளி மிகப் பெரிது. அது குறைய வேண்டும்”, என்றாரவர்